ஆசிய சிலம்ப போட்டியில் பங்கேற்க உதவி கிடைக்காமல் தவிக்கும் கோவை மாணவி

ஆக்னிஷ் வெண்ணிலா

ஆக்னிஷ் வெண்ணிலா

Updated on
1 min read

கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பியூலா. தம்பதியருக்கு 2 குழந்தைகள். மகள் ஆக்னிஷ் வெண்ணிலா (15), தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே ஆக்னிஷ் வெண்ணிலாவுக்கு சிலம்ப போட்டிகளில் ஆர்வம் இருந்ததால், சிலம்பம் வகுப்பில் பெற்றோர் சேர்த்தனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தீவிரப் பயிற்சி எடுத்தவர், தற்போது சர்வதேச போட்டிகளில் சாதித்து வருகிறார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூறும்போது, “மிகவும் வறுமையான குடும்ப சூழலிலும் மகள் சாதிக்க விரும்பியதால், அவருக்கு தொடர்ந்து ஊக்கம் தருகிறோம்.

சிலம்பம், வாள் சுழற்றுதலில் தேசிய அளவில் சாதித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசும், நேபாள நாட்டில் நடந்த போட்டியில், இந்தியா சார்பில் சிலம்பம் பிரிவில் முதல் இடமும் கிடைத்தது.

தற்போது நடப்பு மாத இறுதியில் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் போதிய பணம் இல்லாததால், மகளை அழைத்து செல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

பல்வேறு பகுதிகளிலும் பல முயற்சிகளை மேற்கொண்டும், எங்களுக்கு பொருளாதார ரீதியான ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தாய்லாந்து செல்வது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த வாய்ப்பு கிடைத்தால், மகளின் சர்வதேச போட்டி கனவு நனவாகும்.

பதிவுக் கட்டணம் ரூ.75 ஆயிரம், பயணச் செலவு, தங்கும் செலவு மற்றும் உணவு என மொத்தம் ரூ.1.25 லட்சம் செலவு இருப்பதால் எங்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை” என்றனர். மாணவி ஆக்னிஷ் வெண்ணிலா கூறும்போது, “சிலம்பத்தில் சாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

சமீபத்தில் கோவை வந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. தாய்லாந்தில் 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் சிலம்பம், வாள் வீச்சு, வேல்கம்பு மற்றும் மான்கொம்பு ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதவினால், இம்மாத இறுதியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க ஏதுவாக இருக்கும்” என்றார்.

<div class="paragraphs"><p>ஆக்னிஷ் வெண்ணிலா</p></div>
‘பழநி கோயில் நில மோசடியில் சிபிஐ விசாரணை’ - மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in