

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு, 2-ம் பருவத் தேர்வு கடந்த டிச. 10-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை இன்று (டிச.24) தொடங்கி ஜன. 4-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன.5-ல் திறக்கப்பட உள்ளன.
விடுமுறை தினங்களில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
‘அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜன.5-ல் திறக்கப்படும். இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
அதேபோல், விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் மாணவர்கள் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் வளர்ச்சிக்கு சத்தான
உணவு தருவது அவசியம். இசை, நடனம், ஒவியம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.
மேலும், தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவருந்தவும் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய அறிவுரைகளை பெற்றோர் கவனத்துக்கு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.