

சென்னை: பிரபல கண் மருத்துவமனையான ராதாத்ரி நேத்ராலயாவில் பள்ளி மாணவர்களுக்கான 14-வது வருடாந்திர தீபாவளி பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை (அக்.27) நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ராதாத்ரி நேத்ராலயாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை சென்னை தி.நகரில் உள்ள அதன் முதன்மை கிளையில் வைத்து நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் சென்னையைச் சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து 65 மாணவர்களும், 30 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிலரங்கில் ராதாத்ரி நேத்ராலயாவின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் வசுமதி வேதாந்தம் கலந்து கொண்டு செயல்முறை விளக்கங்கள் அளித்தார். அவரின் செயல்முறை விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பட்டாசு காயங்கள் தொடர்பான பல்வேறு காட்சிகளை நடித்துக் காட்டினர்.
இந்தப் பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக தொழில்முனைவோரான ராஜஸ்தான் ரத்னாவின் ஸ்ரீசுபாஷ் சந்த் ரங்கா கலந்து கொண்டார். அவர், பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள், தங்கள் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகளை வழங்கினார்.
இந்தப் பயிலரங்கம் பற்றி, ராதாத்ரி நேத்ராலயாவின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா கூறுகையில், “ராதாத்ரி நேத்ராலயாவில் தொடர்ந்து 14-வது முறையாக இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து இருக்கின்றனர்” என்றார்.