

கோப்புப் படம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், மாவட்டத்தில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அறிவியல், பொது கொள்கை அல்லது தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் வழங்கப்படும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது ஓராண்டு பணியனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை https://kancheepuram.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை dfokpm@gmail.com, cmgfp.kpm@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.
நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட வன அலுவலகம், காஞ்சிபுரம் வனக்கோட்டம், காஞ்சிபுரம் – 631502 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அக். 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.