

பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. சென்னை எழும்பூர், மாநில பெண்கள் பள்ளியில் இறுதித் தேர்வை முடித்த மகிழ்ச்சியில் மாணவிகள்.படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. இதனால், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.8-ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நிறைவு நாளில் கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 3.89 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதினர். இதில் கணினி அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் கேட்டபோது, “இதுவரை இல்லாத அளவுக்கு கணினி அறிவியல் வினாத்தாளில் மறைமுக வினாக்கள் அதிகம் இருந்தன. குறிப்பாக, 5 மதிப்பெண் பகுதியில் 2 கேள்விகளும், 3 மதிப்பெண் பகுதியில் 3 கேள்விகளும் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்ததால் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆனால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றனர்.
பொதுத் தேர்வு முடிவடைந்ததால், மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க காவல் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.