

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 3,412 மையங்களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்களில் 8 லட்சம் மாணவ, மாணவிகள், 27,783 தனித் தேர்வர்கள், 281 கைதிகள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 250 மையங்களில் 67,516 பேர் எழுதுகின்றனர்.
முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழித்தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பு பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
காப்பி அடித்தல், பிட் அடித்தல் போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, 4,540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்துக்குள் செல்போன், மின்சாதனப் பொருட்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன் தேர்வு எழுத தலைவர்கள் வாழ்த்து
பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: உயர் கல்வியே எங்கள் இலக்கு என்ற உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து, உங்கள் குறிக்கோளின் நுழைவுவாயிலான மேல்நிலை பொதுத் தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. ‘‘என்னால் முடியும்’’ என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவைஇல்லை. தேர்வுகளை முனைப்புடன்,முழு கவனத்துடன் எழுதுங்கள்.
இந்த காலத்தில் உங்கள் உடல்நலன், மனநலனும் மிக அவசியம். சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அமைதி ஆகியவை தேர்வுகளை எதிர்கொள்ளத் துணைநிற்கும். பதற்றமின்றி, நம்பிக்கை, மகிழ்ச்சியோடு தேர்வை அணுகுங்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள்.
உங்கள் உயர் கல்வி இலக்கை அடைய, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மனவலிமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வெற்றிப் பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாணவர்கள் பயமோ, பதற்றமோ இன்றி நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்லுங்கள். தேர்வில் தேர்ச்சி அல்லது அதிக மதிப்பெண் பெற முடியாவிட்டால் முடங்கிவிடாதீர்கள். அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை, மன உறுதியுடன் இருங்கள்.
பாமக தலைவர் அன்புமணி: பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று, சாதனை படைக்க விரும்புகிறேன். மாணவர்கள் பதற்றம், பரபரப்பு இல்லாமல் கவனமாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிளஸ் 2 பொதுத் தேர்வு, உயர்கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு எழுதுங்கள். அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.