

படம்: மெட்டா ஏஐ
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புதுப்புது தொழில்நுட்பங்கள், பல்வேறு வகையான பாடப்பிரிவுகள், கல்லூரிகளில் நடத்தப்படும் வளாக நேர்காணல்களில் மாணவ, மாணவியருக்கு உயர் சம்பள தொகுப்பு, ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆர்வம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் அதிகளவில் காணப்படுகிறது.
பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவை பகுதி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெற்றோர் பலரும், தங்களது குழந்தைகளை தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயன்று வருகின்றனர். அதே நேரம், தனியார் கல்லூரிகளில் அதிகளவில் நன்கொடை வசூலிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் விருப்பமான பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க நினைக்கிறோம். கலந்தாய்வில் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், தனியார் கல்லூரிகளை நாடுகிறோம்.
பல்வேறு கல்லூரிகளிலும் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 1.25 லட்சம் தொடங்கி ரூ. 2.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இது படிப்புக்கேற்ப மாறுபடும். கல்லூரிகளின் ரேங்கிற்கு ஏற்ப, நன்கொடையானது வசூலிக்கப்படுகிறது.
ஒரு மாணவர் தனது விருப்பப் பாடத்தை சொல்லி கேட்டால், அதில் கூடுதல் சான்று படிப்பு ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட இணை படிப்புகளாக சொல்லித்தரப்படுவதாக அதிக கட்டணம் கேட்கிறார்கள்.
கல்லூரி நிலை, படிப்பை அவர்கள் சொல்லித்தரும் விதம், எதிர்கால வேலைவாய்ப்பு, கட்டணம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு தான் பொறியியல் படிப்புக்கு சேர்க்கிறோம். ஆனால் பெற்றோரை அச்சுறுத்தும் வகையில் நன்கொடை உள்ளது.
முதலாம் ஆண்டில் ஒரு மாணவர் நன்கொடையுடன் சேர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ஆகிறது. வேலைவாய்ப்புக்கு பல கல்லூரிகளும் உறுதி அளிக்கின்றன.
மாணவர்கள் பலரும் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சேர்வதை பார்க்கிறோம். கல்லூரியில் படித்து வேலைக்கு தேர்வானவர்களின் ஆண்டு ஊதியம் ரூ.20 லட்சத்தை கடந்தவர்களின் புகைப்படங்களை போட்டு தனியார் கல்லூரிகளில் பதாகைகள் வைத்து விளம்பரம் செய்யப்படுகிறது.
கட்டணம் ஒருபக்கம் என்றால் விடுதிக்கட்டணமும் பல மடங்காக இருக்கிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.80 ஆயிரம் தொடங்கி ரூ.1.30 லட்சம் வரை தர வாரியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில கல்லூரிகளை பார்க்கும்போது வளாகத்துக்குள் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. ஆனாலும் கட்டணம் அதிகளவில் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறும்போது, “தனியார் பொறியியல் கல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றன.
பல்வேறு கல்லூரிகளிலும் பெற்றோர்களின் செல்போன்களை கூட கல்லூரிக்குள் அனுமதிப்பதில்லை. அவர்கள் விசாரிப்பதற்கான இடத்தில் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் என எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை.
பாலகுருசாமி
நான் பணியில் இருந்தபோது பல கல்லூரிகள் தரம் இன்றி இருந்ததால் மூடி உள்ளேன். அரசாங்கம் தான் தனியார் பொறியியல் கல்லூரிகளின் நன் கொடை மற்றும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகள் அறக்கட்டளை நிதி என்ற பெயரில் நன்கொடையை வாரிக் குவிக்கின்றன. அரசாங்கத்தின் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நன்கொடை மற்றும் அதிகப்படியான கல்விக்கட்டணத்துக்கு கடிவாளமிட முடியும்” என்றார்.