

சென்னை: சிபிஎஸ்இ12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைன் வாயிலாக திருத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. தேசிய கல்விக்கொள்கையின்படி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு மட்டும் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
முதல்கட்டமாக பிப்ரவரி மாதமும், 2-ம் கட்டமாக மே மாதமும் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. முதல் தேர்வை வழக்கமான முறையில் அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும். 2-ம் கட்டத்தேர்வை விரும்பியவர்கள் எழுதலாம். மதிப்பெண் அதிகரிக்க விரும்புகிறவர்கள், முதல் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முடியாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
இதுதவிர விடைத்தாள் திருத்தம் மற்றும் வினாத்தாள் முறையிலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் வகுப்பில் அறிவியல் பாடம் உயிரியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் எனவும், சமூக அறிவியல் பாடம் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்கள் அந்தந்தபிரிவில் மட்டுமே அதற்கான விடையை எழுத வேண்டும். மாற்றி எழுதினால் அது கணக்கில் கொள்ளப்படாது. மேலும், அந்தந்த பாடத்தின் ஆசிரியர்களே திருத்தம் செய்வார்கள்.
அடுத்ததாக இந்தாண்டு முதல் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் முதன் முறையாக டிஜிட்டல் வழியில் திருத்தம் செய்யப்பட உள்ளன. அதாவது, விடைத்தாள்களை ஆசிரியர்கள் கணினி திரையில் பார்த்து திருத்தி மதிப்பெண் வழங்குவார்கள். இதன்மூலம் தவறுகளின்றி விரைவாக மதிப்பீடு செய்வும் முடிவுகளையும் விரைவாக வெளியிடவும் முடியும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.