

புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக ராஜஸ்தான் தனிப்படை போலீஸார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த 12-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், என்டிஏவின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஜுன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும். நீட் தேர்வர்கள், பெற்றோர் என்டிஏ வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி, 011-40759000, 011-69227700 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறியபோது, ‘‘வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் 21-ம் தேதிபிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும். ஜூன் 14-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும். மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை’’ என்றார்.
2027-ல் கணினி வழியில் தேர்வு நடைபெறும்
‘‘பேனா, பேப்பர் நடைமுறையில் நீட் தேர்வு நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வினாத்தாள் கசிவு, முறைகேடுகளைத் தடுக்க வரும் 2027-ம் ஆண்டில் கணினி வழியில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். கடந்த 2024-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவின்போது ராதாகிருஷ்ணன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அளித்த அனைத்து பரிந்துரைகளும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.