

கோப்புப் படம்
சென்னை: நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியாகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
என்டிஏ இணையதளத்தில் (https://neet.nta.nic.in) இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்ப பரிசீலனையும் முடிந்த நிலையில், மேற்கண்ட இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுவரை இல்லாத வகையில் நீட் தேர்வுக்கு 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.