

கோப்புப் படம்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர மே 29-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதுவரை ஏறத்தாழ 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துளளனர். இது தொடர்பாக கல்லூரிக் கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வி ஆண்டில் இளங்கலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை ஏறத்தாழ 90 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இணைய வசதி இல்லாத மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் (ரூ.48) செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப் பிரிவுகளில் 1.27 லட்சம் இடங்கள் உள்ளன.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.