

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம், சென்னை எழும்பூர் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை: திமுக கூட்டணியில் சரியான மரியாதை வழங்கவில்லை என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் வைகோவுடன் வாதிட்டனர், அவர்களை வைகோ சமாதானப்படுத்தினார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து, திமுக கூட்டணிக்கும், மதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், புதிதாக வந்தவர்களுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டது, மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது ஆகியவற்றுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து விவாதித்தாகவும், இதனிடையே நிர்வாகிகளை வைகோ சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடன் வைகோ கூறியதாவது: விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது என்னுடைய கருத்து. அதிமுகவில் ஒரு பிரிவினர் ஆதரவு கொடுத்ததை ஏன் விஜய் வேண்டாம் என சொல்லப் போகிறார்.
முன்னதாகவே அவருக்கு தேவையான இடங்கள் இருந்தது. குதிரை பேரம் குறித்து ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். என் கருத்து குதிரை பேரம் நடைபெறவில்லை. ஜோதிடருக்கு அரசு நியமனம் திரும்பப் பெறப்பட்டது வரவேற்கத்தக்கது.
இந்த அரசு பொறுப்பேற்றதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். உதயநிதி ஸ்டாலின் கருத்து சொல்ல முழு உரிமையுள்ளது அவரின் கருத்துக்கு நான் பதில் சொல்ல இயலாது.
அதிமுக பிளவா என்பது பொறுத்திருந்தால் தான் தெரியும். சசிகலா, டி.டிவியை சேர்க்கவேண்டும் என்ற அதிமுகவினரின் கருத்திற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், மதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.