

புதுக்கோட்டை அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராவோர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும் வகையில், புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் சுமார் ரூ.2 கோடியில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்கள், அதிவேக இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட வசதிகளுடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து தேர்வுகளுக்கு தயாராகின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளதையடுத்து, தற்போது இம்மையத்தில் படிப்போரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.
மையத்துக்குள் மட்டுமின்றி வராண்டாவிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். இம்மையத்தை ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலருமான வி.வாசுதேவன், நூலகர் திவ்யா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
இதுகுறித்து அறிவுசார்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.வாசுதேவன் கூறியதாவது: 2024-ம் ஆண்டு முதல் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தேவையான சுமார் 3,500 புத்தகங்கள் உள்ளன.
தேர்வுகளுக்குத் தயாராவதற்காக கணினிகளும் உள்ளன. இம்மையத்துக்கு தொடக்கத்தில் 10 பேர் மட்டுமே வந்து சென்றனர். பின்னர், தினமும் சுமார் 150 பேர் வந்து கொண்டிருந்தனர். 6,500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பி எஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்புக்குப் பிறகு 250-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அனைவரும் குழுவாக அமர்ந்து படிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் இம்மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், திறக்கப்படும் நேரமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சி பெற்றவர்களில் 2024-ல் 28 பேரும், 2025-ல் 14 பேரும் பல்வேறு துறைகளில் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.
நிகழாண்டு காவலர் பணிக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு வேலைக்காக தயாராகி வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக செயல்பட்டு வரும் இம்மையத்தில், சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கவும், அடிக்கடி மாதிரித் தேர்வுகள் நடத்தவும் சம்பந்தப்பட்ட துறை நிதி ஒதுக்கீடு செய்தால், அரசு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றார்.