

ஆதிரா
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த எல்ஐசி முகவர்களான சுகதன் - மினி தம்பதியரின் மகள் ஆதிரா (30). நேற்று முன்தினம் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் 483-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுஉள்ளார்.
பெங்களூருவில் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படித்துக் கொண்டிருந்த ஆதிரா கடந்த 2016 பிப்ரவரியில் ஒரு விபத்தில் சிக்கினார். பல மாத சிகிச்சைக்கு பிறகு அவர் கோழிக்கோடு திரும்பினார். எனினும் 2 ஆண்டு அவர் அம்னீஷியா நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்தார்.
இது குறித்து ஆதிரா கூறுகையில், “சுமார் 2 ஆண்டுகள் எனக்கு நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. நான் பிடிஎஸ் படித்ததை மறந்துவிட்டேன். ஆனால் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு எனக்கு மெதுவாக நினைவு திரும்பியது. பிடிஎஸ் படிப்பை முடிக்க முடிவு செய்து பெங்களூரு கல்லூரி திரும்பினேன். அங்கு எனக்காக ஒரு பராமரிப்பாளரை குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.
முதல் 3 ஆண்டுகளுக்கு நான் பாடங்களை மறந்துவிட்டேன். ஆனால் இறுதியில் நான் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி படிப்பை முடித்தேன். 2020ம் ஆண்டில் கோழிக்கோடு திரும்பிய நான் ஓர் அரசு சாரா நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பணியாற்றினேன். கரோனா பெருந்தொற்று காலம் அது. அப்போதுதான் எனக்கு சிவில் சர்வீஸ் பற்றிய சிந்தனை வந்தது” என்றார்.
இதையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயராகி வந்த ஆதிரா தனது 4-வது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு இவரது தங்கை அனாகா பக்கபலமாக இருந்துள்ளார். விபத்துக்குப் பிறகு அக்காவை கவனிக்க இவர் தனது பிஎஸ்சி சைக்காலஜி படிப்பை பாதியில் விட்டார். பிறகு பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேர்ந்த அவர் சமீபத்தில் அதை நிறைவு செய்தார்.
இது குறித்து ஆதிரா கூறுகையில், "எனது வெற்றிக்கு பின்னால் எனது தங்கையின் தியாகமும் அர்ப்பணிப்பும் உள்ளது. யுபிஎஸ்சி நேர்காணலில் எனது சிறந்த தோழி யார் என்று என்னிடம் கேட்டபோது அவளைத்தான் கூறினேன்" என்றார்.
ஆதிரா ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறார். ஐஏஎஸ் கிடைக்காவிட்டால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய விருப்பதாக கூறுகிறார். “அந்த நெருக்கடி எனக்குள் ஒரு துணிச்சலான நபரை உருவாக்கியது. பெரிய கனவுகள் காண்பதற்கு சக்கர நாற்காலி வாழ்க்கை எனக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன்" என்றார் ஆதிரா.