சென்னை: ஐஐடி சென்னையில் அக்குவா மேப் நீர் மேலாண்மை மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் உதவியுடன் செயல்பட்டு வரும் இந்த மையம், கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அந்த நேரத்தில் ஐஐடி முன்னாள் மாணவரும் தீம் வொர்க் அனலிட்டிக்ஸ் தலைமைச் செயல் அலுவலருமான பரசுராம் பாலசுப்பிரமணியன், இதிகாஷா ஆராய்ச்சி மற்றும் டிஜிட்டல் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் நாராயணன் ஆகியோர் கணிசமான நிதியுதவி வழங்கினர்.
இந்த மையம் நீர் மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவரான பரசுராம் பாலசுப்பிரமணியன் ரூ.5 கோடி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஐஐடி டீன் (பழைய மாணவர் தொடர்பு மற்றும் பெருநிறுவன உறவுகள்) பேராசிரியர் அஷ்வின் மகாலிங்கம் கூறும்போது, “ஐஐடி அக்குவாமேப் நீர் மேலாண்மை மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து நிதியுதவி செய்து வரும் முன்னாள் மாணவர் பரசுராம் பாலசுப்பிரமணியனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது நிதியுதவியானது நீர் மேலாண்மை ஆராய்ச்சிப் பணிக்கு மட்டுமின்றி நம் நாட்டின் நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டறியவும் பேருதவியாக இருக்கும். ஐஐடி-யை பொருத்தவரையில் பழைய மாணவர்கள்தான் ஐஐடி மேற்கொள்ளும் சமூகரீதியிலான ஆராய்ச்சிப் பணிகளுக்கு வலிமையான தூண்களாக விளங்குகிறார்கள்” என்றார்.
பரசுராம் பாலசுப்பிரமணியன் கடந்த 1971-ம் ஆண்டு சென்னை ஐஐடியில் பிடெக் பட்டமும், 1973-ல் எம்டெக் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐஐடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருத்தியல் கணினி ஆய்வு மையத்துக்கு முன்னாள் மாணவர் அரவிந்த் ரகுநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐஐடியில் பிடெக் பட்டம் பெற்ற அவர் தற்போது ஆர்ஓசி 360 என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆராய்ச்சி மையத்துக்கு தாராளமாக நிதியுதவி அளித்து மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அரும்பணியாற்றிவரும் அரவிந்த் ரகுநாதனை கவுரவிக்கும் வகையில் இந்த மையத்துக்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தெரிவித்துள்ளார்.