

சென்னை: மேல்நிலை துணைத் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்படும் என, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு (11 மற்றும் 12-ம் வகுப்பு) துணைத் தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளன.
தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று (23-ம் தேதி) பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செய்முறைத் தேர்வு தேதி குறித்த விவரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.