தமிழக அரசுப் பள்ளிகளில் ஒளியேற்றும் இலவசத் திட்டங்கள்

ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள்
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒளியேற்றும் இலவசத் திட்டங்கள்
Updated on
2 min read

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இவை மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும் பாகுபாடற்ற சமத்துவச் சூழல் பள்ளிகளில் நிலவவும் பெரிதும் துணைபுரிகின்றன.

இலவசச் சீருடை - பாடப் புத்தகங்கள் - காலணிகள்

அரசுப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசச் சீருடை, பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம் 1985இல் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில்வோருக்குத் தகுதியின் அடிப்படையில் இவை வழங்கப்பட்டன.

1998ஆம் ஆண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 1987-1988ஆம் கல்வி ஆண்டு முதல் இலவசக் காலணிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் காலணிகள், சாக்ஸ் வழங்கப்படுகின்றன.

விலையில்லா மிதிவண்டி

பதினோராம் வகுப்பு பயிலும் பட்டியல் இன – பட்டியல் பழங்குடியின மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2001 – 02 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. 2005 – 06 கல்விஆண்டில் அனைத்து அரசு - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 2012இல் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

இலவசக் கண்ணாடி

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கண் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களில் கண் குறைபாடு இருக்கிறவர்களுக்கு ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் இலவசக் கண் கண்ணாடி வழங்கும் திட்டம் 2010இல் அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போது ‘கண்ணொளி காப்போம்’ என்கிற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சானிட்டரி நாப்கின்

10 – 19 வயது வரையுள்ள அரசுப் பள்ளி மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின்கீழ் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மடிக்கணினி

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படவில்லை.

கல்விக் கருவிகள்

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பையும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜியாமெட்ரிப் பெட்டிகளும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வண்ணப் பென்சில்களும் வழங்கப்படுகின்றன.

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி உண்டு. இவை தவிர நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான நிதியுதவி - உதவித்தொகைத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழக அரசுப் பள்ளிகளில் ஒளியேற்றும் இலவசத் திட்டங்கள்
Good Luck to You, Leo Grande: பேரிளம் பெண்ணின் காமமும், நான்சிக்கு கிட்டிய புரிதலும் | திரை தேவதைகள் 26

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in