

சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை வேளச்சேரியில், ‘வெஸ்ட் ஆஸ்திரேலியா யுனிவர் சிட்டி’ என்ற பெயரில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் இளநிலை பாடப்பிரிவுகளான பிசினஸ் மேனேஜ் மென்ட், டேட்டா சயின்ஸ் முதலாமாண்டு கல்விக்கட்டணம் தலா ரூ.14.52 லட்சம், ஏ.ஐ. பாடப்பிரிவுக்கு ரூ.17.93 லட்சம், எம்பிஏ படிப்புக்கு ரூ.23.10 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 21 பல்கலைக் கழகங்களில் பாதிக்கு மேல் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை.
குறிப்பாக, சென்னை பல்கலைக்கழகத்தில் 515 ஆசிரியர்களுக்கு 180 பேர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 405 ஆசிரியர்களுக்கு 202 பேர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 230 ஆசிரியர்களுக்கு 119 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
மேலும், 188 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 7,198 காலியிடங்கள் உள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. தமிழகத்தின் 90 சதவீதமான ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலும் அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தமிழகத்திலே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கை, சமூக நீதிக்கு எதிரான தாகும். இதற்கு எதிராக அனைவரும் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை வேளச்சேரியில் நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான இறுதி ஒப்புதலை யுஜிசி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியே ஆகும். இது கல்வி உரிமையை வணிக நலன்களுக்கு அடகு வைப்பதாக அமையும்.
தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கிற சட்டத் திருத்தம் ஒன்றை கடந்த செப்டம்பரில் தவெக அரசு கொண்டு வந்தது. அடுத்த தாக்குதலாக அந்நிய பல்கலைக்கழகத்துக்கு அனுமதி தந்துள்ளது. அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு போதிய ஆசிரியர்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்காமல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வரவேற்பது தேசத்தின் இறையாண்மை மீதான தாக்குதலாகும்” என்று கூறியுள்ளார்.