

கோப்புப் படம்
ஆவடி: பட்டாபிராமில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பை நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் பங்கேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பிறகு, ஆட்சியர், மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தி, தேவையான புத்தகத் தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆட்சியர் பிரதாப் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நீட் தேர்வுக்கான சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஏப். 6-ம் முதல் மே 1 வரை நடைபெற உள்ள இந்த பயிற்சியில், தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு ஆவடி பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக தரமான நீட் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நீட் தேர்வு உண்டு உறைவிட பயிற்சி திட்டம் மாணவர்களின் நம்பிக்கையையும் திறனையும் உயர்த்தும். இந்த முயற்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்று, மருத்துவக் கல்வியில் அதிக அளவில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.சுப்பராவ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) (பொறுப்பு) லிங்கேஷ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, தனியார் பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.