

சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே தேர்வுகளுக்கு சென்னையில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் சி.பழனி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் வழிகாட்டுதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு மற்றும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள், ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு மற்றும் குரூப்-டி தேர்வு, எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு ஆகியவற்றுக்கு ஜூன் 1 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், ரயில்வே, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான வகுப்புகள் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களிலும் காலை 10 முதல் மதியம் 1 மணிவரை நேரடியாகவும், அதே நாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை ஆன்லைன் வழியாகவும் நடைபெறுகின்றன.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதில் சேர விரும்புவோர் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் கிண்டி திருவிக தொழிற்பேட்டை பேருந்து நிலையம் (ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) அருகே உள்ள டான்சி கட்டிடத்தின் முதல் தளத்தில் (ஏ-28) இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையத்தை (தொடர்பு எண்: 9361566648) நேரில் அணுகலாம்.