

சென்னை: காற்றுக்காக கதவைத் திறந்து தூங்கிய மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப் பிரதேச மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். கோடை வெயில் புழுக்கம் காரணமாக, வீட்டின் முன் கதவை லேசாகத் திறந்து வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். சட்டென கண் விழித்த மூதாட்டி அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அவரது கணவரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து, அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததோடு, இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் சம்பவ இடம் விரைந்து வந்து பொதுமக்களிடம் சிக்கிய இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட நபர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் (30) என்பதும், அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் மூதாட்டியின் வீட்டின் அருகே குடிவந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.