

சென்னை: அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு வழங்கும் ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வகுப்புகள் ஜூன் 15 முதல் தொடங்குகின்றன.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறையின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான குழு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த படிப்பானது குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உள்ளூர் தொழில் சூழல் மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, மாணவர்களுக்கு நேரடித் தொழில்முறை பயிற்சிகளையும் இந்த சான்றிதழ் கல்வியானது வழங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, இந்த 3-வது குழு மாணவர்களுக்கு மேலும் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு அகமதாபாத் புத்தாக்க நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் நேரடியாக வழிகாட்டுவார்கள். அத்துடன் நவீன திறன் வகுப்பறைகள், நூலக வசதிகள் மற்றும் களப்பயணங்கள் மூலம் நிஜ உலக வணிகச் சூழலை நேரடியாக கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பில் சேர பட்டதாரிகள் அல்லது தொழில்துறை பயிற்சி முடித்து சொந்தமாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள, 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணமாக ரூ.80 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வகுப்புகள் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதிமுதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8668101638 என்ற எண் அல்லது academy@editn.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.