ஐஏஎஸ் தேர்வில் சாதித்த கோவை மாற்றுத் திறனாளி இளைஞர்!

அப்துல்லா அப்ரித்

அப்துல்லா அப்ரித்

Updated on
1 min read

கோவை: கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல்லா அப்ரித் (25). குறைப் பிரசவமாக ஆறு மாதத்தில் பிறந்த அப்துல்லா அப்ரித்துக்கு உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லை.

யாருடைய துணையும் இன்றி சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் வளர்ந்த இவர், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததுடன், பெரும் முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் ஒரே முயற்சியில் தேர்ச்சிபெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 942-வது இடத்தையும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் 2-ம் இடத்தையும் பிடித்து ஐஏஎஸ் கனவை நனவாக்கி உள்ளார்.

தமிழ் வழியில் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள அப்துல்லா அப்ரித் கூறியதாவது: எனது தந்தை அப்துல் அஜீம், தாய் சர்மிளா, தங்கை, நண்பர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், உறவினர்கள் என பலரின் உதவியோடு சாதித்துள்ளேன்.

என்னால் தனியாக இயங்க முடியாது. கண் பார்வை குறைபாடும் இருப்பதால் தந்தை தான் பள்ளி, கல்லூரிகளில் புத்தகங்களை படித்து காண்பித்து கல்வி கற்றுத்தந்தார். அவர் ஒரு நகைப்பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிதான்.

சிவில் சர்வீஸ் தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இந்திய அளவில் உச்சபட்ச தேர்வு இது என்றாலும், முயற்சித்தால் யாரும் வெற்றிபெறலாம். நான் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றேன். தேர்வு எழுதுவதற்கு கடும் பயிற்சிகள் எடுத்தேன்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சிகள் மேற்கொண்டேன். செவி வழியாக கேட்டுத்தான் படிக்க முடிந்தது. டெல்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் நேர்காணல் நடத்திய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்களை கூறினேன்.

நான் தமிழில் தான் தேர்வை சந்தித்து தேர்ச்சி பெற்றுள்ளேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களில் முதலில் தங்களை மாணவர்கள் என்று நினைக்காமல், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று நினைத்து படிக்கத் தொடங்குங்கள். நிச்சயம் வெற்றியைத் தரும்.

வரும் ஆகஸ்ட் மாதம் எங்கள் பேட்சில் வெற்றிபெற்றவர்களுக்கான பணி ஆணையை மத்திய அரசு வழங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்துல்லா அப்ரித்தின் வெற்றிக்கதை சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளது.

<div class="paragraphs"><p>அப்துல்லா அப்ரித்</p></div>
தமிழ் இஸ்லாமியர்களும் ‘ஹபீபி’ திரைப் பதிவும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in