

ஏ.ஐ., தரவு அறிவியல் ஆகிய துறைகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? எதிர்காலத்தில் இந்தத் துறைகளுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும்? - அழகம்மை, கல்லூரி மாணவி, கோவை
இந்தியாவில் இந்தத் துறையின் வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களே எடுத்துக்காட்டுகின்றன. 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் Naukri தளத்தில் 35,000க்கும் அதிகமான ஏ.ஐ., இயந்திரக் கற்றல் தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 38% அதிகம். புதிதாகப் படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் 34% அதிகரித்துள்ளன. கோவையும் இந்த வளர்ச்சியில் பின்தங்கவில்லை.
கோவை, கொச்சி, இந்தூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட ஏ.ஐ வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக, சென்னை அல்லது பெங்களூருவுக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
வெளிநாடுகளிலும் இதே போக்கைக் காண முடிகிறது. 2030 வரை உலக அளவில் வேகமாக வளரக்கூடிய வேலைவாய்ப்புகளின் பட்டியலில் Big Data, AI, Machine Learning நிபுணர்கள் முன்னணியில் இருப்பதாக உலகப் பொருளாதார மன்றம் (WEF) தெரிவிக்கிறது. 2027க்குள் இந்தியாவுக்கு மட்டும் 12.5 லட்சத்துக்கும் அதிகமான ஏ.ஐ. திறனாளர்கள் தேவைப்படுவார்கள் என்பது Deloitte–Nasscom கணிப்பு.
இந்தத் துறைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பட்டம் பெற்றிருப்பது மட்டுமே போதாது; உண்மையான திறனும் செய்முறை அனுபவமும்தான் முக்கியம்.
பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்த மாணவர்கள், கல்லூரியில் ஏ.ஐ, தரவு அறிவியல் தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம்? கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்திருப்பது கட்டாயமா? - ராஜா, தென்காசி
பொறியியல் படிப்பில் சேர விரும்பினால், +2-வில் Physics, Chemistry, Maths ஆகிய மூன்று பாடங்களையும் படித்திருக்க வேண்டும். இது TNEA சேர்க்கை விதிமுறை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Sc. Data Science படிக்க விரும்புவோருக்குச் சில இடங்களில் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.
Maths, Business Maths, Statistics, Computer Science ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தைப் படித்திருந்தால் பல பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கின்றன. எனவே, Commerce பிரிவில் Business Maths படித்தவர்களுக்கும் சில கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்கலாம்.
சேர்க்கை விதிமுறைகள் பல்கலைக்கழகத்துக்குப் பல்கலைக்கழகம் மாறுபடக்கூடும் என்பதால், விண்ணப்பிப்பதற்கு முன் அவற்றைச் சரிபார்க்க வேண்டும். IIT Madras வழங்கும் Online BS in Data Science படிப்புக்கு எந்தப் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவரும் விண்ணப்பிக்கலாம்.
Computer Science படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகு Programming அடிப்படையிலிருந்து கற்றுக்கொடுக்கப்படும். ஆனால் Maths பாடங்களைப் புறக்கணிக்க முடியாது.
Statistics, Probability, Linear Algebra ஆகியவை இந்தத் துறையின் முக்கிய அடித்தளங்கள். +2-வில் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல், பாடங்களைப் புரிந்துகொண்டு படித்திருந்தால் அது பெரிய பலமாக இருக்கும்.
ஏ.ஐ சார்ந்த தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள், பள்ளிப் பருவத்திலேயே என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? - உமா, பள்ளி ஆசிரியர், சேலம்
பள்ளிப் பருவத்தில் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதைவிட, சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கே முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கணக்குகளை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, ‘இது ஏன் இப்படி வருகிறது?’ என்று கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
புதிர்கள், Sudoku, சதுரங்கம் போன்றவையும் தர்க்கரீதியாகச் சிந்திக்கப் பழக்குகின்றன. 8 அல்லது 9ஆம் வகுப்பிலேயே Scratch மூலம் Programming-ஐ அறிமுகப்படுத்தி, பின்னர் Python கற்கத் தொடங்கலாம். ஆர்வமுள்ள மாணவர்களை INOI போன்ற Informatics ஒலிம்பியாட் போட்டிகளுக்குத் தயார்படுத்தலாம்.
ஆங்கிலத்தில் படித்துப் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இத்துறைக்கான பெரும்பாலான பாடப்பொருள்களும் தொழில்நுட்ப ஆவணங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. ChatGPT போன்ற கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
அவை வழங்கும் பதில்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவை சரியானவையா என்று சரிபார்க்கும் பழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். ஆசிரியர்களாகிய நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி, மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிப்பதுதான்.
“இது எப்படி வேலை செய்கிறது?” என்று கேட்கும் மாணவர், ஏற்கெனவே இந்தத் துறையை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துவிட்டார்.
ஏ.ஐ. துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா அல்லது கலை, அறிவியல் படிப்புகளை முடித்தவர்களும் இத்துறையில் நுழைய முடியுமா? - இனியா, திருச்சி
நிச்சயமாக நுழைய முடியும். சில நிறுவனங்கள் Campus Placement-க்காக முதலில் பொறியியல் கல்லூரிகளை அணுகுகின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்தத் துறையில் ‘என்ன படித்திருக்கிறீர்கள்?’ என்பதைவிட, ‘என்ன செய்யத் தெரியும்?’ என்பதற்கே இப்போது அதிக மதிப்பு உள்ளது.
B.Sc. Data Science, B.Sc. Computer Science, BCA, B.Sc. Statistics அல்லது Maths படித்தவர்கள் Data Analyst, Business Analyst போன்ற பணிகளில் நுழைய முடியும். பின்னர் MCA, M.Sc. Data Science அல்லது Business Analytics சார்ந்த MBA படிப்புகள் மூலம் தங்கள் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ளலாம்.
உண்மையில், வேறு துறைகளில் பெற்ற அறிவு இங்கு கூடுதல் பலமாக அமையும். வங்கித் துறையை நன்கு புரிந்துகொண்ட B.Com பட்டதாரி ஒருவர் Data Analytics கற்றுக்கொண்டால், Finance Analytics பணிகளில் அவருக்குத் தனித்துவமான வாய்ப்பு கிடைக்கலாம்.
SQL, Python, Statistics, Excel அல்லது Power BI போன்ற திறன்களைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பயன்படுத்திச் செய்த Project-கள் மூலம் தங்கள் திறமையை நிரூபிப்பது அவசியம். Interview-இல் நீங்கள் படித்த கல்லூரியின் பெயரைவிட, நீங்கள் செய்த பணியைப் பற்றியே அதிகம் கேட்கப்படலாம்.
- அஸ்வின் ராமசாமி