

அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் தினேஷை பாராட்டிய நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.
நாகப்பட்டினம்: முழு ஈடுபாட்டுடன் படித்தால் பயிற்சி வகுப்புக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர முடியும் என அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற நாகை மாணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பெரிய குத்தகை கிராமத்தைச் சேர்ந்த முருகையன்- உமாராணி தம்பதியரின் மகன் தினேஷ். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், நாகை மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதினார். இதில் 599 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவரை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமண்ய பாலசந்திரா உள்ளிட்ட பலரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். டிஆர்ஓ பவணந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து மாணவர் தினேஷ் கூறும்போது, நான் வேறு எந்த பயிற்சி வகுப்பிலும் சேராமல் வீட்டில் இருந்தபடியே புத்தகங்கள் மற்றும் இணையதளம் மூலம் படித்தேன்.
பள்ளி ஆசிரியர்களும் எனக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்தனர். எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். முழுமையான ஈடுபாட்டுடன் படித்தால், எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் அனைவராலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர முடியும் என்றார்.