சென்னை: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்குப் பாடப்பிரிவுகள் வாரியாகத் தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பதவியில் அறிவியல், கணித பாடப் பிரிவுகளுக்காகச் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. கலை பாடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வை போன்று இதுவும் ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.
சிஎஸ்ஐஆர் யுஜிசி தேர்வுக்கான டிசம்பர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன. இந்நிலையில், பாடப் பிரிவுகள் வாரியாகத் தேர்வு தேதிகளைத் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 19, 22, 27 தேதிகளில் ஒவ்வொரு நாளும் 2 ஷிப்டுகளாக நடத்தப்பட உள்ளன. வாழ்வியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பப் பாடத்துக்கான தேர்வு டிசம்பர் 19-ம் தேதியும், வேதியியல், நிலத்தியல், காலநிலை, கடல் அறிவியல், விண்வெளி அறிவியல் தேர்வு டிச.22-ம் தேதியும், கணிதம், இயற்பியல் பாடங்களுக்கான தேர்வு 27-ம் தேதியும் நடைபெறுகின்றன.