

சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ .15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.2.50 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான எம்பிபிஎஸ் படிப்பில் ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், பிடிஎஸ் படிப்பில் ரூ.9 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்களை 4.5 ஆண்டுகள் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் 5 ஆண்டுகள் அல்லது 5.5 ஆண்டுகள் வரை கட்டணம் வசூலித்துள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவ கல்லூரிகளின் விவரங்களை சேகரிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சில மருத்துவக் கல்லூரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தது. ஆனால் அதற்கு போதுமான ஆதாரம் இல்லாததால், மீண்டும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசின் கெடுபிடியால், சில மருத்துவக் கல்லூரிகள் பயிற்சி காலத்தில் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,"தமிழக அரசின் நடவடிக்கையால், ஏற்கெனவே பணம் வாங்கிய கல்லூரிகள், அந்த பணத்தை திருப்பி தருவதற்கு, மாணவர்களின் வங்கி கணக்கை பெற்றுள்ளன. இது போன்ற கல்லூரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது. சில கல்லூரிகள், ஆண்டு தோறும் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலிப்பதாக புகார் வருகிறது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம், கணக்கில் வராத பணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது பொதுமக்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கலாம்" என்றனர்.