

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல, மாணவிகளே முன்னிலையில் உள்ளனர்.
489 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்களில் நடைபெற்றது. பதிவு செய்த 7 லட்சத்து 99,528 மாணவ, மாணவிகளில் 7 லட்சத்து 91,654 பேர் தேர்வு எழுதினர். 7,874 பேர் (0.98%) பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, சென்னை டிபிஐ வளாகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்), பள்ளிகளுக்கு மின்னஞ்சலிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவு விவரங்கள் அனுப்பப்பட்டன. முதல்முறையாக வாட்ஸ்அப் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (95.03%) இது 0.17 சதவீதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 3.81 சதவீதம் அதிகம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 1,695 பேர் உட்பட மொத்தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 98.87 சதவீதத்துடன் ஈரோடு முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை (98.05%), கன்னியாகுமரி (97.63%) மாவட்டங்கள் அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் விழுப்புரம் (85.92%) உள்ளது. தலைநகர் சென்னையில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்ளது. அரசுப் பள்ளிகள் பிரிவிலும் ஈரோடு (98.24%) மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்கடுத்த 2 இடங்களைப் பிடித்துள்ளன. விழுப்புரம் (82.10%) மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இத்தேர்வில் 7,536 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 489 அரசுப் பள்ளிகள் உட்பட 2,639 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தனியார் பள்ளிகளின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலையில் தற்போது 98.72% ஆக குறைந்துள்ளது. அதேநேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்துள்ளது.
25,521 தனித் தேர்வர்களில் 6,171 பேர் (24%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 8,855 மாற்றுத்திறன் மாணவர்களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதிகளில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 வகுப்பில் தனித் தேர்வர்களாக 20,444 பேர் தேர்வு எழுதியதில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13-ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் வழங்கப்படும். விடைத்தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூனில் துணைத் தேர்வு: பொதுத் தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர ஏதுவாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
கட்ஆஃப் குறையும்: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பிரதானமான கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட சற்று குறைந்துள்ளது. தவிர, முழு மதிப்பெண் (‘சென்டம்’) பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2025-ல் வேதியியல் 3,181, கணிதம் 3,022, இயற்பியல் 1,125 பேர் என ‘சென்டம்’ பெற்ற நிலையில், தற்போது வேதியியல் 632, கணிதம் 732, இயற்பியல் 105 பேர் என குறைந்துள்ளது.
இதனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கட்ஆஃப் 180-200 பிரிவில் 2 முதல் 4 வரையும், 160-179 பிரிவில் 6 முதல் 8 வரையும் மதிப்பெண் குறையும். இதுதவிர, நீட் தேர்வு தேவைப்படாத கால்நடை மருத்துவம் போன்ற இதர மருத்துவப் படிப்புகளுக்கும் கட்ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100: பாடவாரியாக 100-க்கு 100 பெற்றவர்களின் எண்ணிக்கை:
தமிழ் - 83
ஆங்கிலம் - 21
இயற்பியல் - 105
வேதியியல் - 632
உயிரியல் - 784
கணிதம் - 732
தாவரவியல் -31
விலங்கியல் - 18
கணினி அறிவியல் - 6,945
வணிகவியல் - 683
கணக்குப் பதிவியல் - 1,946
பொருளாதாரம் - 440
வரலாறு - 282
புவியியல் - 42
கணினி பயன்பாடுகள் - 2,099
வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல் - 463
புள்ளியியல் - 17
மனையியல் - 6
கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்: பிளஸ் 2 தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி வீதம் அதிகமாகவும், பொருளாதார பாடத்தில் குறைவாகவும் காணப்படுகிறது. தேர்ச்சி வீதம் வருமாறு:
மொழிப்பாடம் - 98.96%
ஆங்கிலம் - 98.74%
இயற்பியல் - 98.87%
வேதியியல் - 98.82%
உயிரியல் - 99.49%
கணிதம் - 99.12%
தாவரவியல் - 98.62%
விலங்கியல் - 98.69%
கணினி அறிவியல் - 99.84%
வணிகவியல் - 97.55%
கணக்குப் பதிவியல் - 98.94%
வரலாறு - 97.90%
புவியியல் - 99.32%
புள்ளியியல் - 99.58
பொருளாதாரம் - 97.54%
மனையியல் - 96.89%
பாடப் பிரிவுகள் (குரூப்) வாரியாக தேர்ச்சி வீதம்:
அறிவியல் பிரிவு - 96.90%
வணிகவியல் - 92.67%
கலை - 85.19%
தொழிற்பாடம் - 85.97%
மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)
ஈரோடு 98.87
சிவகங்கை 98.05
கன்னியாகுமரி 97.63
திருநெல்வேலி 97.54
திருச்சி 97.50
தூத்துக்குடி 97.24
தஞ்சாவூர் 97.19
தென்காசி 97.18
விருதுநகர் 97.17
நாமக்கல் 97.04
திருப்பூர் 97.03
ராமநாதபுரம் 96.70
கோவை 96.66
சேலம் 96.61
கரூர் 96.20
மதுரை 96.13
திண்டுக்கல் 95.92
புதுக்கோட்டை 95.88
கடலூர் 95.57
சென்னை 95.43
காஞ்சிபுரம் 95.31
தேனி 95.27
பெரம்பலூர் 94.53
நாகப்பட்டினம் 94.38
கள்ளக்குறிச்சி 94.26
நீலகிரி 94.13
திருவள்ளூர் 94.11
திருப்பத்தூர் 93.68
மயிலாடுதுறை 93.51
தருமபுரி 93.49
செங்கல்பட்டு 93.25
தி.மலை 92.87
அரியலூர் 91.70
கிருஷ்ணகிரி 91.31
திருவாரூர் 91.00
வேலூர் 90.73
ராணிப்பேட்டை 88.20
விழுப்புரம் 85.92