

சென்னை: ஜூலை மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் நாளை புதன்கிழமை (ஆக.5) வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 10-ம் வகுப்பு துணை தேர்வுகள் ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை 66,488 மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள் நாளை (ஆக.5) வெளியிடப்படுகின்றன.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) புதன்கிழமை பிற்பகல் முதல் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜெராக்ஸ் பிரதி: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் அதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில நேரில் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள் கட்டணத்தையும் அங்கேயே பணமாக செலுத்திவிடலாம். ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.275. உதவி இயக்குநர் அலுவலக முகவரியை தேர்வுத்துறை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலுகத்தில் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு: விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் கூறியுள்ளார்.