

சென்னை: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தை பயன்படுத்தி குவாண்டம் தொழில்நுட்பம், போட்டோனிக்ஸ் சென்சிங், மெட்ராலஜி ஆகிய துறைகளில் சென்னை ஐஐடி ஆய்வுக்குழு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியை உலகளவில் எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்துக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு என்ற அமைப்பு சென்னை ஐஐடி-யில் இயங்கி வருகிறது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட இந்த ஆய்வுக் குழு, உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், செயற்கை வைரத் தொழில் துறையில் இந்தியாவை உலகளவில் முன்னணி நாடாக உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியா தன்னிறைவு பெறும் இதன் மூலம், ரத்தினத் தரம் மற்றும் மின்னணு தரத்திலான வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு பெறும். இதனால், தொழில்நுட்பத் திறன்கள் மேம்படுத்தப்படும்.
ஏற்றுமதி உயரும். புத்தாக்கத் தொழில் மற்றும் தொழில்முனைவுத் திறன் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் பூமிக்கு கீழே வெட்டி எடுக்கப்படும் இயற்கை வைரங்களின் வேதியியல் மற்றும் ஒளியியல் பண்புகளையே கொண்டுள்ளன.
செயற்கை வைரங்கள் ஆபரணங்கள் நீங்கலாக பிற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மையம் இந்த ஆராய்ச்சி பணி தொடர்பாக, சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவின் முதன்மை ஆய்வாளர் ராமச்சந்திர ராவ் கூறும் போது, “ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைர தொழில்நுட்பங்களுக்கான நவீன வசதிகளை ஏற்படுத்தும் தேசிய மையத்தை அமைப்பதுதான் எங்கள் ஆராய்ச்சிக் குழுவின் தலையாய நோக்கம்.
இது, உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் வைர வளர்ச்சி செயல்முறைகளை மேம்படுத்த உதவும். செயற்கை வைரத் தொழில் துறைக்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பயிற்சி மற்றும் பாடத் திட்டங்களும் விரைவில் வழங்கப்படும்" என்றார்.