

சென்னை: பள்ளிகளில் நாய்க்கடி சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சமீபகாலமாக குடியிருப்புகள், பொது இடங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு விலங்குகளிடம் பாதுகாப்பாக நடந்துகொள்வது குறித்தும், எதிர்பாராத விதமாக நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் பள்ளிகள் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து, பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தைச் சுற்றிபோதுமான வேலிகள், உறுதியான எல்லைச் சுவர்கள் மற்றும் வாயில்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியின் தூய்மை மற்றும் பராமரிப்பை கண்காணிக்க பிரத்யேக நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமிக்க வேண்டும். அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பள்ளி நுழைவாயிலில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
அதேபோல், பள்ளி வளாகத்தில் அல்லது அருகாமையில் தெரு நாய்கள் தங்குவதற்கு ஏதுவான இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கழிவுகள் நாய்களை ஈர்க்கும் என்பதால், பயனுள்ள கழிவு மேலாண்மை மற்றும் முறையான வடிகால் அமைப்புகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ள ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறும்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.