

சென்னை: தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பிறகு அச்சங்கத்தின் தலைவர் கலீல் பாஷா செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ 2025-ம் ஆண்டு தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம்.
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சரும் உறுதி அளித்தார். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணியை இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
குறிப்பாக குரூப்-2 தேர்வுகளுக்காக ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தொடர்ந்து தயாராகி வரும் நிலையில், அறிவிக்கப் படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவது ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு தேர்வில் வெறும் 800 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.
அரசுத் துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், காலிப்பணியிடங் களை ஆய்வு செய்து, 2025 குரூப் 2, 2ஏ மூலம் கூடுதல் பணியிடங்களை அறிவிப்பதன் மூலம் அரசின் நிர்வாகத் திறன்மேம்படுவதோடு, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும்.
எனவே 2025 குரூப்-2 தேர்வில் கூடுதல் காலிப்பணியிடங்களை உடனே அறிவித்து நிரப்புமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.