

சென்னை: பகுதி நேரமாக பிஎச்டி முடித்தவர்கள் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்தானா என்பது தொடர்பாக, உயர் கல்வித் துறை புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று, அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த மார்ச் 13-ம் தேதி உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் (எண் 40) பகுதிநேர முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களாகக் கருதப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை மீதான ஆட்சேபத்தை அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, பகுதி நேர முனைவர் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள்தான் என உறுதியாக தெரிவித்தனர்.
எனவே, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் உரிய மாற்றம் செய்து புதிய அரசாணை வெளியிடவேண்டும். உரிய நேரத்தில் விளக்கம் அளித்து உதவிப் பேராசிரியர் தேர்வர்களிடையே ஏற்பட்டிருந்த பதற்றத்தை தணித்த உயர்கல்வித் துறை அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.