நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க பேரம் பேசுகின்றனரா?

நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க பேரம் பேசுகின்றனரா?
Updated on
1 min read

விருத்தாசலம்: ஒவ்வொரு ஆண்டும் செப். 5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த நல்லாசிரியர் விருது தொடக்கத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களின் தேர்ச்சி, பாடப்பிரிவில் மேற்கொள்ளும் மதிப்பெண், மாணவர்களுடனான நல்லுறவு போன்ற காரணிகளை மையப்படுத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களின் திறனாய்வு பரிந்துரையின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முகத் தேர்வுக்குப் பின் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக நல்லாசிரியர் விருது பெறுவதைக் காட்டிலும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நேர்மையான பணி ஈடுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு கிடைக்காமல், அரசியல் பின்புலம் மற்றும் அந்தந்த பகுதி எம்எல்ஏ, எம்.பி ஆகியோரின் பரிந்துரையின் பேரிலும், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையின் பேரிலும் தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகின்ற சூழல் நிலவியதால், பல ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதை தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அமைந்துள்ளதால், பழையநிலை மாறியிருக்கும், இந்தமுறை தகுதியானவர்களுக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் 42 ஆசிரியர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனிடையே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பியுங்கள், நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என கடலூர் மாவட்டத்தில் உள்ள தவெக நிர்வாகிகள் ஆசிரியர்களிடம் பேரம் பேசி வருவதாகவும், குறிப்பாக அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற சிலர், அமைச்சர் ராஜ்குமாரிடம் கூறி விருதுக்கு பரிந்துரைப்பதாகவும், அதற்காக லட்சம் ரூபாய் செலவாகும் என கூறி வருவதாகவும் தெரிகிறது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர் வன்னி அரசு பெயரை கூறி, அவர் மூலமாக பரிந்துரை கடிதம் பெற்றுத் தரப்படும் என விசிக மற்றும் தவெக நிர்வாகிகள் ஆசிரியர்களை அணுகி பேரம் பேசி வருவதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி சூரியகுமார் கூறுகையில், “இந்த முறையும் தகுதியான ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காத சூழல் தான் உள்ளது. பொதுவாக இம்முறை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தையும் குறைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை யாரிடம் பேசினார்கள் என்பது தனக்கு தெரியாது” என்றார்.

இதையடுத்து தியாகதுருகம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் செந்திலிடம் பேசியதில், “தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் சார்பாக யாரிடமும் பேரம் பேசவில்லை. எங்கள் மாவட்டச் செயலாளர், ஆசிரியர்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்” என்றார். இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்குமார் கூறுகையில், “அதுபோன்று யாருக்கும் நான் பரிந்துரைக்கவில்லை. கட்சியினரும் ஈடுபட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க பேரம் பேசுகின்றனரா?
சிஜேபி-யின் செப்.5 பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in