

சென்னை: தமிழகத்தில் இணையவழி விண்ணப்ப நடைமுறை அமலுக்கு வந்த 5 மாதங்களில், தனியார் பள்ளிகளின் 4,400 விண்ணப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய பள்ளிகள் தொடங்குதல், தடையில்லாச் சான்று (என்ஓசி) உள்ளிட்ட விண்ணப்பங்களைக் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இணையவழியில் சமர்ப்பிக்கும் நடைமுறையைத் தமிழக அரசு கொண்டு வந்தது. அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு தனியார் பள்ளிகள் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்தது. புதிய நடைமுறையின்படி நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) ஜூலை முதல் நவம்பர் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி 4,180 விண்ணப்பங்கள் புதுப்பித்தலுக்கும், 105 விண்ணப்பங்கள் புதிய பள்ளிகள் தொடங்கவும், 96 விண்ணப்பங்கள் தற்காலிக அங்கீகார அனுமதி பெறவும், 19 விண்ணப்பங்கள் தரம் உயர்த்தவும் என மொத்தம் 4,400 விண்ணப்பங்கள் கடந்த 5 மாதங்களில் பெறப்பட்டு அதற்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மெட்ரிக் பள்ளிகளில் 2,229 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 1,504 விண்ணப்பங்களுக்கும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 420 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையான காலக்கட்டங்களில் 105 பள்ளிகள் புதிதாக திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 சதவீதம் சிபிஎஸ்இ பள்ளிகள் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.