

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார். zஇந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டார். இது அவருக்கு அறிமுக போட்டியாக அமைந்தது. நியூஸிலாந்து அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம், டெவன் கான்வே ஜோடி பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தது. 26 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குர்னூர் பிரார் பிரித்தார். டெவன் கான்வே 79 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் குர்னூர் பிரார் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்ன் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினார்.
தனது 32-வது அரை சதத்தை கடந்த டாம் லேதம் 128 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில், ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 110 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஹென்றி நிக்கோல்ஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் வீசிய ஷார்ட் பாலை விளாசிய போது டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் நின்ற ஆகாஷ் தீப்பிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆகாஷ் தீப் பந்தில், ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். 110 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் டேரில் மிட்செல், டாம் பிளண்டல் ஜோடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றது. டேரில் மிட்செல் 74 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில், பேக்வேர்டு ஷார்ட் லெக் திசையில் நின்ற துருவ் ஜூரலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 128 பந்துகளில், 74 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார். பொறுமையாக விளையாடிய டாம் பிளண்டல் 114 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவரது 13-வது அரை சதமாக அமைந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது.
டாம் பிளண்டல் 53, கிளென் பிலிப்ஸ் 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா
ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஜஸ்பிரீத் பும்ரா 19 ஓவர்களை வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. கைவசம் 5 விக்கெட்கள் வைத்துள்ள நியூஸிலாந்து அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.