

சென்னை: ‘டிட்வா’ புயல், கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுகள் ஜன.20-ம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றன. அப்போது, ‘டிட்வா’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.
தயாராக அறிவுறுத்தல்: இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் நவம்பர் 24, 25, 29 மற்றும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று நடக்க இருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட பருவத் தேர்வுகள் ஜனவரி 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.