

கோப்புப் படம்
சென்னை: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அருகே இருக்கும் 5 அல்லது 6 அங்கன்வாடி மையங்களை தத்தெடுக்க வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி, பராமரிப்பு கிடைக்க உதவ வேண்டும். இந்த சமூகப் பணிகளை மாணவர்களின் பாடத் திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வியை மேம்படுத்தவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களுக்கு மாணவர்கள் சென்று களப்பணிகளில் ஈடுபடலாம். இது மாணவர்களுக்கு அனுபவ ரீதியான கற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வையும் உருவாக்கும்.
மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு தொடர்ச்சியான கல்வி மற்றும் கள ரீதியான வழிகாட்டுதலை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கன்வாடிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.