

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று (மே 28) நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும்சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களைவைத்து இறுதி முடிவுகள்வெளியிடப்படுகின்றன.
அதன்படி நடப்பாண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது.
இதில் முதல்நிலை தேர்வெழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி காலை முதல்தாள் தேர்வும் (பொது அறிவு), மதியம் 2-ம் தாள் (திறனறிவு) தேர்வும் நடைபெறும். இதற்காக தேர்வு மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வர்களுக்கு பல்வேறு விதமான கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் கடந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.