Published : 09 May 2023 06:00 AM
Last Updated : 09 May 2023 06:00 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு | தரவரிசையில் செங்கை-25, திருவள்ளூர்-26, காஞ்சி-31; 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்டவாரியான தரவரிசையில் செங்கல்பட்டு 25-வது இடத்தையும் திருவள்ளூர் 26-வது இடத்தையும் காஞ்சிபுரம் 31-வது இடத்தையும் பிடித்தன. இம்மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 92.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் மொத்தம் 283 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 82. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 30. மெட்ரிகுலேஷன், சுயநிதி பள்ளிகளின் எண்ணிக்கை 171 ஆகும்.

இந்தப் பள்ளிகளில் இருந்து 31,916 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 29,528 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.52 சதவீதம் ஆகும். இந்தப் பொதுத் தேர்வில் மாணவர்கள் 15,149 பேரும் மாணவிகள் 16,767 பேரும் தேர்வு எழுதினர். இதில் 13,466 மாணவர்கள், 16,062 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.26 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.71 சதவீதம் ஆகும்.

இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்கள் 10,942 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.6 சதவீதம். அரசுப் பள்ளிகளில் 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் செங்கை மாவட்டம் 25-வது தரவரிசையை பெற்றுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 92.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி உட்பட 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் 26-வது தரவரிசையை பெற்றுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி இந்து தமிழ் திசை நாளிதழிடம் கூறும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 41,534 பேர் தேர்வு எழுதினர். இதில் 38,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 92.47 சதவீதமாக உள்ளது. பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், அரசு மாதிரி பள்ளியிலும் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் எட்டியது” என்றார்.

காஞ்சிபுரம்: இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 90.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,429 மாணவர்களும் 6,712 மாணவிகளும் எழுதினர். மொத்தம் 13,141 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில் பொதுப் பாடத் தேர்வில் 12,661 மாணவ, மாணவிகளும் தொழில் பாடப் பிரிவில் 480 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இதில் 11, 935 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.82 ஆகும். மாணவர்கள் 86.50 சதவீதமும், மாணவிகள் 94.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள், மாணவர்களை விட 8.46 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி சதவீதம் 86.46 சதவீதம். மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 31-வது தரவரிசையை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x