பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல்

பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல்

Published on

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது, என துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியார் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழக அரசின் முழு நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்புடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதில் ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் பயிற்சி பெறலாம். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறவுள்ளது. சேர்க்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் மைய நூலகத்தின் 3-வது தளத்தில் நடைபெறவுள்ளன. இங்கு பாடம் சார்ந்த சுமார் 1,10,000 புத்தகங்களும், போட்டித்தேர்வுகளுக்கு 5,000 புத்தகங்களும் உள்ளன. போட்டித்தேர்வுகளில் விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in