

புதுச்சேரி: “புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு தகுந்த வசதிகள் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இருக்கின்றது. தேவையான ஆசிரியர்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரியில் பல்வேறு சமுதாய சங்கங்கள் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர். குரூப் பி பிரிவு அரசிதழ் பதிவு இல்லாத பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனடிப்படையில் குரூப் பி அரசிதழ் பதிவு இல்லாத பதவிகள் நிரப்பும்போது ஓபிசி-11, எம்பிசி-18, பிசிஎம்-2, இபிசி-2, பிடி-0.5 சதவீதம் என மொத்தம் 33.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றியுள்ளது.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் தகுதியானவர்கள். ஏனென்றால், அவர்களை தேர்வு செய்யும்போது தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு தகுந்த வசதிகள் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இருக்கின்றது. நல்ல ஆசிரியர்களும் இருக்கின்றனர். தேவையான ஆசிரியர்களை நிரப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும்.
பஞ்சாலைகளில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் அத்தனையும் கொடுத்து முடிக்கப்பட்டு, பஞ்சாலையை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நேற்று சட்டப்பேரவையில் சொல்லியிருந்தேன்.
புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க சீரியசாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. காவல் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம். எல்லா காவல் நிலையங்களுக்கும் சொல்லியுள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் அரசின் எண்ணம். காவல் துறையில் தனி குழு அமைத்து கஞ்சா விற்பனையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குரிய தேவையான மருந்துகள் இருக்கிறது. விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சுகாதாரத் துறை நடவடிக்கையை எடுத்து வருகிறது. வெளிப்புற சிகிச்சை பெற வருவோருக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் கொடுப்பதற்கான மருத்துவர்களும் இருக்கின்றனர். இம்மாதம் இறுதிக்குள் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு எப்போதும் வலியுறுத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.