எல்கேஜி, யுகேஜிக்கு ரூ.50,000, ரூ.1 லட்சம் செலவிடுவது தேவையா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

நிகழ்வில் புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை
நிகழ்வில் புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை
Updated on
2 min read

புதுச்சேரி: எல்கேஜி, யுகேஜி படிப்புக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் செலவிடுவது தேவையா என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 5வது பட்டமளிப்பு விழா ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் நிறுவனத்தின் இயக்குநரும், தேர்வு கட்டுப்பாட்டாளருமான செல்வராஜ் வரவேற்றார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: “இன்றைய சூழ்நிலையில் அதுவும் கரோனா காலங்களை கடந்து மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது சவாலான ஒன்றுதான்.

இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இணையதளம், சமூக ஊடகம். உண்மையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களின் தியாகங்களால் தான் நீங்கள் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். தாய் தந்தையரின் தியாகம் கணக்கில் அடங்காதது. அதை நினைத்தால் நாம் வேகமாக வளர முடியும். பலருக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நேர நிர்ணயம் செய்து வெற்றியாளர்களாக மாற வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை திட்டமிட்டு எதிர்கால இலக்குகள் என்ன என்பதை நிர்ணயிக்க வேண்டும். நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. உலகத்தில் 5-வது பொருளாதார பலம் பெற்ற நாடாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற இந்தியா, 3-வது பொருளாதார பலம் பெற்ற நாடாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கான பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய இளைஞர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்குக்கு மாற்றுவதற்காக தான் இந்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறோம் என்று பாரதப் பிரதமர் சொன்னார். இன்று, ஆறு வயது கடந்து தான் முதல் வகுப்பில் சேர வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற நாடுகளில் எல்லாம் குழந்தைகள் ஆறு வயதுக்கு மேல்தான் முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க தொடங்குகிறார்கள். அதேபோல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கல்வியை தர வேண்டும் என்று கூறுகிறது. புதுச்சேரி அரசு பல திட்டங்களை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு, கடமை இருக்க வேண்டும். இங்கே மாணவிகள் அதிக பட்டம் பெற்று இருக்கிறார்கள். ஆனால், மாணவிகள் ஆராய்ச்சி படிப்புகளில் குறைவாக ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட மேற்படிப்புகளில் குறைவாக தான் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சவாலான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். சவாலான துறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சுமைகளை தாங்கும் அளவுக்கு நமது தோள்களை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ”புதுச்சேரியில் அன்றைக்கு ஒரு கல்லூரி தான் இருந்தது. இன்றைக்கு எத்தனை மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. 16 பட்ட மேற்படிப்பு, 8 ஆராய்ச்சி பிரிவுகள் இருக்கின்ற என்பது பெரிய மகிழ்ச்சி. ஆனால், அதற்குரிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற சின்ன வருத்தம் எனக்கு இருக்கிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பெண்கள் அதிக அளவில் தங்கப்பதக்கம், பட்டம் பெற்றுள்ளனர்.

பாரதிதாசனின் கூற்றுப்படி பெண்கல்வி புதுச்சேரியில் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை என்னிப்பார்த்து மகிழ்ச்சியடைகிறோம். எல்லோரும் படிக்க வேண்டும், நல்ல கல்வி கிடைக்க வேண்டும், ஏழை எளிய மாணவர்கள் விரும்புகின்ற பாடத்தை எடுத்து படிக்கின்ற வாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் எண்ணம். அது நடந்துள்ளதா என்றால், நடந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம், வெறி, ஆசை அதிகம் இருக்கிறது. அதற்காக பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி செலவிடுகின்றனர்.

எல்கேஜி, யுகேஜி படிப்புக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் வரை செலவிடுகின்றனர். ஆனால் அதனை நினைத்து பார்க்கும்போது அது தேவையா? புதுச்சேரியில் என்ன இல்லை. பல அரசு பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். உயர்கல்வி பெறுவதற்கு காமராஜர் கல்வி திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து கட்டணங்களையும் நாம் கொடுக்கின்றோம். ஆனால், பலர் தனியாரிடம் பணத்தை செலவிடுகின்றனர். இதுபோன்ற நிலையில் அரசு கல்லூரியில் படித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி, கல்வித்துறை செயலர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in