

சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘ஓஷன் வேவ்எனர்ஜி கன்வெர்ட்டர்’ என்ற கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி கடந்த நவம்பர் மாதம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் 20 மீட்டர் ஆழத்தில் இக்கருவி தற்போது நிறுவப்பட்டுள்ளது.
இதன்மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் கடல் அலைகளில் இருந்து 1மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு இலக்குகளை அடைய உதவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐஐடியின் இந்த கண்டுபிடிப்புக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
‘சென்னை ஐஐடியின் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்து’ என நிர்மலா சீதாராமனும், ‘நிலையான, புத்திசாலித்தனமான எதிர்காலத்துக்கு இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் வழிவகுக்கும். அடுத்த தலைமுறை கண்டுபிடிப்புகளுக்கான சென்னை ஐஐடி குழுவின் தொடர் முயற்சிகளுக்கு பாராட்டு’ என தர்மேந்திர பிரதானும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.