திறன் மேம்பாட்டுக் கழகம், லயோலா கல்லூரி சார்பில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: டிச.5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திறன் மேம்பாட்டுக் கழகம், லயோலா கல்லூரி சார்பில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: டிச.5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் லயோலா கல்லூரிஇணைந்து நடத்தும் கட்டணமில்லா ஊடகவியல் சான்றிதழ் படிப்பில் சேர டிச.5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம்கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம்பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாகஇந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் இதழியல் உலகில் வளர்ந்துவரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அலசலுடன் எழுத வல்ல இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. ஊடகவியலுக்குத் தேவையான வலுவான அடிப்படைத் திறன்களை இந்தப் படிப்பு தருகிறது.

கட்டணமில்லா இந்தப் படிப்பில், வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. திறன்மிக்க ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். பொருளாதாரம் மற்றும் நிதி,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு,விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எழுத்து, ஒளிப்படம், வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், திறன்பேசி, ட்ரோன் இதழியல் உட்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் தக்க துறைசார் நிபுணர்கள் வழியாக மாணவர்கள் திறன்களைப் பெறுவர். பட்டப்படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்கள் வாரம் 5 நாள்கள் சென்னை லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகளுக்கு வர வேண்டும். விண்ணப்பிப்பதற்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இறுதிநாளாகும்.

ஊடகவியல் சான்றிதழ் படிப்பைப் பற்றி மேலும் அறிய: https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதளத்தையும், விண்ணப்பிக்க shorturl.at/nsU25 என்ற இணைப்பையும் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in