Published : 02 Sep 2022 03:58 AM
Last Updated : 02 Sep 2022 03:58 AM

ஐஐடி.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டுதல் வெளியீடு - தமிழக அரசு அரசாணை

சென்னை: ஐஐடி, ஐஐஎம்.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறைசெயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும். இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர் அதை சரிபார்த்து, அந்த மாணவருக்கான மொத்த செலவின விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்து உரிய நிதி ஒதுக்கீடு கோரி இயக்குநரகம் அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும்.

இந்த விவகாரத்தில் சாதி, வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் மாணவர் விவரம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் பரிந்துரைகளை பரிசீலித்து முதலாம் ஆண்டிலேயே, 4 ஆண்டுகளுக்கான செலவினத் தொகைக்கும் நிர்வாக ஒப்புதல் அளித்து அரசால் ஆணை வெளியிடப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கருத்துருவை ஆட்சியர்களிடம் இருந்து பெற்று தொழில்நுட்பக் கல்வி ஆணையரே மாணவருக்கு நிதியை வழங்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கு அத்தாட்சியாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் தரும் சான்றிதழ், தமிழக இருப்பிடச் சான்றிதழ், உயர்கல்வி சேர்க்கை ஆணை, கல்வி நிறுவன அனைத்து கட்டண விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x