

போட்டித் தேர்வுகள் எதை சார்ந்துஇயங்குகின்றன என்று முதலில்யோசிப்போம். அவை அறிவை சார்ந்ததா, ஆளுமை சார்ந்ததா? அல்லது, இரண்டும் கலந்த கலவையா?
அறிவை சார்ந்தது என்று முடிவுக்கு வந்தால், அறிவின் அடிப்படை தகவலை சார்ந்தது. தகவல்களின் திரட்சி அறிவு என இன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அரசுப் பணிகள், நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் 3 வகைப்படும். ஒன்று,கீழ்நிலைப் பணிகள். 2-வது, இடைநிலைப் பணிகள். 3-வது, மேல்நிலைப் பணிகள். இதில் வெறும் தகவல் சார்ந்த வினாக்கள் கீழ்நிலைப் பணிகளுக்கே கேட்கப்படுகின்றன.
இதில் கீழ்நிலைப் பணியாளர்களின் தன்மை எது என்று கேட்டால், உயரதிகாரியால் கொடுக்கப்படும் பணிகளை செய்து முடிப்பது. அவற்றை பொருத்தவரை சிக்கல் தீர்க்கிற, முடிவெடுக்கிற திறன் எதிர்பார்க்கப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் போன்ற குரூப்-4 பணிகளைச் சார்ந்த அவர்களுக்கு வேலைக்கான தேர்வுகளில் தகவல்சார்ந்த கேள்விகளே கேட்கப்படுகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானதாகிறது. சுருக்கெழுத்தர், தட்டச்சர் போன்றோருக்கு கூடுதலாக, அதுசார்ந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது.
அதற்கு மேல் இடைநிலைப் பணிகள். இவர்களைப் பொருத்தவரை, கீழ்நிலை ஊழியர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்தார்களா என்று மேற்பார்வையிடும் பொறுப்பு உண்டு. மாநில அரசு நிர்வாகத்தை பொருத்தவரை இது குரூப்-2, 2A போன்ற பிரிவாகக் கருதப்பட்டு, இவர்களுக்கான கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டும் மத்திய அரசுப் பணிகளுக்கும் பொருந்தும். இங்கு TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல, மத்தியில் SSC எனப்படும் Staff Selection Commission இதற்கான அதிகாரப்பூர்வ தேர்வு வாரியம் ஆகும். SSC தேர்வு முறைப்படி, கீழ்நிலைப் பணிகளுக்கு NTS எனும் பிரிவிலும், இடைநிலைப் பணிக்கு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வும் நடத்தப்படுகிறது.
இப்போது, மேல்நிலைக்கு வருவோம். அதாவது குரூப்-2 பிரிவு.இப்பிரிவில் தேர்வாகிறவர்கள் அதிகாரிகளாகப் பொறுப்பேற்கிறார்கள். அவர்கள் கீழ்நிலையில் உள்ள எழுத்தர்கள் போலவோ, இடை நிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் போலவோ செயல்பட முடியாது. அவர்கள் ஆளுமையை பயன்படுத்துபவர்களாக, கொள்கை வகுப்பாளர்களாக, முடிவெடுப்பவர்களாக, துறையின் நோக்கத்தையும், போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் மாநில அரசுப் பணியாக இருந்தால் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 பிரிவு அலுவலர்கள். அதாவது, துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கதுணை பதிவாளர், வணிக வரி உதவிஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் அலுவலர் ஆகியோர்.
இதுவே மத்திய அரசுப் பணியாக இருந்தால், UPSC நடத்தும் IAS, IPS, IRS, IFS போன்று 24 விதமான உயர் பதவிகள் இருக்கின்றன. இப்பதவிக்கும் கல்வித்தகுதி பட்டப் படிப்பே. ஆனால் குரூப்-1 தேர்வு - குரூப்-2 தேர்வு இரண்டுக்கான போட்டித் தேர்வு முறைகளில்தான் வேறுபாடு இருக்கிறது.
UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் 3 நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam), மற்றும் ஆளுமைத் தேர்வு (Personality Test). ஏன் இப்படி மூன்று நிலைகள்? அடிப்படையில் இது வடிகட்டல் முறை. இதில் முதல்நிலைத் தேர்வில் அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்கள் (Objective Type Questions). பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் இத்தேர்வில் எத்தனை பேருக்கு சிந்தனைத் தெளிவு இருக்கிறது, எத்தனை பேரிடம்தெளிவான தகவல் அறிவு புதைந்திருக்கிறது என்பது சோதிக்கப்படுகிறது. அதாவது Concept Clearing and Knowledge Clearing ஆகிய இரண்டையும் சோதிக்கும் களமாக முதல்நிலைத் தேர்வு இருக்கிறது.
முதல்நிலைத் தேர்வு என்ற சிறுநதியைக் கடந்து கரையேறுபவர்களுக்கு அடுத்த களம் முதன்மைத் தேர்வு. இது அனைத்து கேள்விகளுக்கும் சொந்தமான நடையில் விவரித்து விடையளிக்கும் (Descriptive) தன்மையில் அமைந்துள்ளது. அதிலும் பக்கம் பக்கமாக நாம் கதை எழுத முடியாது. ஒரு வினா கேட்கப்பட்டு, 30 வரிகள் இடம் விடப்பட்டிருந்தால் அந்த அனுமதிக்கப்பட்ட வரிகளுக்குள் உங்களால் தெளிவான பதிலை அளிக்க முடிகிறதா என்பதை சோதிக்கும் முயற்சியே அது.
முதல்நிலைத் தேர்வில் சரியானவற்றை தேர்வு செய்யும் திறனும்,முதன்மைத் தேர்வில் கொடுக்கப்பட்ட சிக்கலுக்கு சரியான தீர்வு எழுதும் திறனும் சோதிக்கப்படுகிறது. இறுதியாக ஆளுமைத் தேர்வு.
இதில் பெரிதாக பாட வினாக்கள் கேட்கப்படுவது இல்லை. அரை மணி நேரம் உங்களோடு உரையாடுவதில் இருந்து, உங்கள் ஆளுமையை எடைபோடும் முயற்சி. வெகு சாதாரணமான கேள்விகள்கூட கேட்கப்படலாம். உங்கள் சொந்த ஆளுமையைக் கண்டறிந்து, கொடுக்கப்படும் பணிக்கு இவர் சரிப்பட்டு வருவாரா? என்று பொருத்திப் பார்க்கும் நடைமுறை இது. டிஎன்பிஎஸ்சியிலும் சில பணிகளுக்கு ஆளுமைத் தேர்வு இருக்கிறது. ஆளுமைத் தேர்வு பல்வேறு ஆளுமை கூறுகளைக் கண்டறியும் முயற்சியே அன்றி வேறில்லை. முதல் இரண்டும் சிறு, பெரு நதிகள் என்றால், மூன்றாவதான ஆளுமைத் தேர்வானது நதி கடலோடு சேரும் கழிமுகப் பகுதியாக உள்ள ஒரு காயல் போன்றது. சரியான பயிற்சி இருந்தால், இந்த மூன்றையும் மூச்சடக்காமலே நீந்திக் கடக்கலாம்... வா..!
(3-ம் பகுதி.. வரும் சனிக்கிழமை)
முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 01 - வெற்றிக்கான மூன்று சூத்திரங்கள்!