Last Updated : 11 Jul, 2017 11:42 AM

Published : 11 Jul 2017 11:42 AM
Last Updated : 11 Jul 2017 11:42 AM

ஜி.எஸ்.டி. வரி: தப்பித்துவிட்டதா கல்வித் துறை?

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த நாளிலிருந்து ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் சூழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கல்வி தொடர்பானது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கல்வி வராது என மத்திய அரசு அறிவித்தாலும், கல்விக்கான செலவு அதிகரிக்கும் என்று தொடர்ந்து சலசலப்பு எழுந்துவருகிறது. இதை மறுத்து கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. “கல்வித் தொடர்பான வரி விதிப்பில் ஜி.எஸ்.டி.யினால் எந்த மாற்றமும் இல்லை. புத்தகப் பை உட்படப் பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது” என்றார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

இது போதுமா?

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிவரையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களின் போக்குவரத்துச் செலவில் ஜி.எஸ்.டி.யால் மாற்றம் இருக்காது. அதேபோல மாநில, மத்திய, யூனியன் அரசுப் பள்ளிகளின் மத்திய உணவுத் திட்டத்திலும் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு, சுகாதாரச் சேவைகளிலும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படவில்லை. அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மீது ஜி.எஸ்.டி. தாக்கம் இருக்காது. இப்படிச் சில விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதலில் 28 சதவீத வரி விதிக்கப்பட்ட புத்தப் பையின் விலை, தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 சதவீதம் வரி விதிக்கப்பட்ட வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு இனி வரி கிடையாது. கம்ப்யூட்டர் பிரிண்டரின் வரி 28-லிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மட்டும்போதுமா என்கிற கேள்வியைக் கல்வி செயற்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் எழுப்புகிறார்கள்.

சந்தைப்படுத்தும் நடவடிக்கை

“கல்விக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதே அவமானம். முதலாளித்துவ நாடுகள் எனச் சொல்லப்படும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்டவை ‘விலை இல்லா கல்வி’யை வழங்கிக்கொண்டிருக்கின்றன. அதிலும் பின்லாந்து நாட்டில் 98 சதவீத உயர்கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு ஆசிரியர் பணிக்கான திறனும் தகுதியும் ஒருவரிடம் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவருக்குக் கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல் படிப்புக்கான அத்தனை பொருட்செலவையும் அரசு முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. அதைவிடவும் முக்கியம், அங்கு ஆசிரியர் பணிக்கு உயர்ந்த சம்பளம் வழங்கப்படுகிறது. பின்லாந்திலும் மேலே குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலான குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ஆனால், இங்கு நிலை என்ன?

மேலும் ஜி.எஸ்.டி. வரி கல்வி நிறுவனங்களுக்குத்தான் விதிக்கப்படவில்லை. அதனால் கல்வி கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றுதான் மத்திய அரசு மறைமுகமாகச் சொல்கிறதே தவிர, குறையும் என்று சொல்லவில்லை. ஆக, தனியார் பள்ளிகள் தங்களுடைய கல்விக் கட்டணத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ளப் போவதில்லை!

அடுத்துத் தனி வகுப்புகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதைப் பாராட்ட முடியுமா? நியாயமாகப் பார்த்தால் அரசாங்கம் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை விதிக்க வேண்டும். பள்ளி வகுப்பில் சீராகவும் சிறப்பாகவும் பாடம் நடத்தப்படுவதுதானே நியாயம்! அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களிடம் பணம் பறிக்கும், குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் தனி வகுப்புகளுக்கு வரி விதிப்பது பாசாங்கு. உணவகத்தில் சாப்பிடும் உணவுக்குக் கூடுதல் வரி விதிப்பதும், கடலை மிட்டாய்க்கு வரி என்பதும் கல்வியோடு சம்பந்தப்படவில்லை என எப்படிச் சொல்வீர்கள்? பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உணவக வசதி கிடையாது. அங்குப் பணிபுரியும் பல ஆசிரியர்கள் அக்கம்பக்கம் உள்ள ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள்.

இதற்கும் மேலாக, ஜி.எஸ்.டி.யை வெறுமனே வரியாக மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மிகப் பெரிய சர்வதேச ஒப்பந்த வலை பின்னப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியக் கல்வியைச் சந்தைமயப்படுத்தும் நடவடிக்கை இது” என்கிறார் கல்வியாளரும் செயல்பாட்டாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு.

வேலைவாய்ப்பு எங்கே?

‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற அறிவிப்பே போலியானது எனக் கடுமையாக விமர்சிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன். இது இளைஞர்களை பாதிக்கும் வேலைவாய்ப்புக்கும் பொருந்தும் என்கிறார் அவர்.

“வேலையில்லா வளர்ச்சி என்பதுதான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், அவர் மீது வைக்கப்பட்ட மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆனால், அப்போது ஆண்டுக்கு 8 லட்சம் வேலைவாய்ப்புகள் தரப்பட்டன. ஆனால், தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் 1 லட்சம் வேலைவாய்ப்பு மட்டுமே 2016-ல் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் உள்ளப் பணிக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இன்றைய நிலைப்படி 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் ஜி.எஸ்.டி. வரி மூலமாக உங்களுடைய செலவை மிச்சப்படுத்தித் தருகிறோம் என மத்திய அரசு பெருமிதம் கொள்வது அவமானம். இந்த வேலையில்லா திண்டாட்டத்தை மூடிமறைக்க மத்திய அரசு மக்களைத் தொடர்ந்து சுயதொழில் செய்ய அறிவுறுத்துகிறது” என்கிறார்.

இந்தியாவில் 6-லிருந்து 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-லேயே இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், நடைமுறையில் தரமான கல்வி இலவசமான வழங்கப்படுவது எட்டாக் கனியாகிவிட்டது. மறுபுறம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி.யில் 4 சதவீதத்தை மட்டுமே கல்விக்கு இந்திய அரசு ஒதுக்கி உள்ளது. இதிலும் 50 சதவீதம் மட்டுமே தொடக்க நிலைக் கல்விக்குச் செலவிடப்படுகிறது. இவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் அடைப்படை மூலதனமான கல்வியை மேம்படுத்த இவற்றை எல்லாம் செய்வதே, உண்மையான வளர்ச்சியை உருவாக்கும். அதற்கு பதிலாக கல்வி கட்டணத்தில் ஜி.எஸ்.டி.யின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுவதை மட்டும் நினைத்து மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x