Last Updated : 04 Jun, 2019 09:27 AM

Published : 04 Jun 2019 09:27 AM
Last Updated : 04 Jun 2019 09:27 AM

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி?

மாணவர் சேர்க்கை குறைந்துவருவதால் நாடு முழுவதிலும் உள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகக் கடந்த சில ஆண்டு களாகவே பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலோ 3000-த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன.

இதைத் தடுத்து நிறுத்த  1,500 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பேரணி செல்வது, வீடுகள் தோறும் சென்று பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட முயற்சிகளில் தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

கல்வியை வியாபாரமாகத் தனியார் பள்ளிகள் மாற்றிவிட்டதும் அவற்றை அரசு தட்டிக்கேட்காமல் விடுவதும் இங்கே தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்காமல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளிடம் பல பெற்றோர் தஞ்சமடைவது ஏன்?

அரசுப் பள்ளிகளில் தூய்மையான கழிப்பிட வசதி இல்லை, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்பதில் தொடங்கி ஆசிரியர் பற்றாக்குறை… இப்படிப் பல ‘ஏற்புடைய’ காரணங்கள் இதுதொடர்பாக இருக்கவே செய்கின்றன. இவற்றைச் சீர்படுத்தாமல் அரசுப் பள்ளிகளைத் தேடி மக்கள் வருவது கடினமே.

ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளையும் தரமான கல்வியையும் இந்திய அரசுப் பள்ளிகளால் வழங்க முடியுமா? நிச்சயமாக முடியும் என்று நிரூபித்திருக்கும் இரண்டு மாநிலங்களின் அரசுப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை.

முன்மாதிரியான டெல்லிப் பள்ளிகள்

பாழடைந்த கட்டிடம், உடைந்து ஆட்டம்காணும் மேஜைகள், இருண்ட வகுப்பறைகள், பள்ளிக்குப் புத்தகங்களை எடுத்துவருவதைக் காட்டிலும் ஸ்க்ருடிரைவர், போதை மருந்துகளை எடுத்துவரும் மாணவர் கள் என்பதுதான் நான்காண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவின் தலைநகர் டெல்லி அரசுப் பள்ளிகளின் நிலை.

அங்கு 1,028 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 450-க்கும் மேற்பட்டவை முன்மாதிரி அரசுப் பள்ளிகளாக இன்று மாற்றப்பட்டிருக் கின்றன. ‘Model school’ என்று அழைக்கப் படும் இந்த முன்மாதிரி அரசுப் பள்ளிகளில் இணைய வசதி, லேப்டாப், புரொஜெக்டருடன்கூடிய 8,000 ஹைடெக் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உறுதியான, அழகான மேஜைகளும் இருக்கைகளும் பொருத்தப் பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட உள் அரங்குகள், பரந்துவிரிந்த தூய்மையான விளையாட்டுத் திடல், பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரில் கண்கவர் ஓவியங்கள், நீச்சல்குளம் என இந்தப் பள்ளிகள் தற்போது செயல்பட்டுவருகின்றன.

அரசுப் பள்ளிகளைக் கண்டு ஒதுங்கச் செய்பவற்றில் ஒன்று கழிப்பிடங்களின் நிலை. இந்தப் பள்ளிகளில் கழிப்பிடங்களும் நவீனப்படுத்தப்பட்டுத் துப்புரவாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவை சாத்தியப்பட முழு முதற்காரணம், டெல்லி அரசு கடந்த நான்காண்டுகளாக மாநில பட்ஜெட்டில் 26 % நிதியைக் கல்விக்கு ஒதுக்கி முறையாகச் செலவழித்துவருகிறது. (தமிழகத்தில் இந்த ஆண்டு கல்விக்கு 6% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது). நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு மேஜையிலும் இருக்கையிலும் வெளிப்படுகிறது.

மகிழ்ச்சி பாடத்திட்டம்

உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் தரமான கல்வியை உறுதி செய்துவிட முடியுமா?

ஸ்மார்ட் வகுப்பறைகள் மட்டுமே முன்னேற்றமாகிவிடாதுதான். ஆனாலும், கற்றல் நிகழும் சூழல் என்பது பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்களின் தன்னம்பிக்கையில் பெரும் பங்காற்றவே செய்கிறது என்பதை உணர்ந்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தங்களுடைய பாடப் புத்தகத்தை எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாமல் ஆறு-எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருப்பதை மாற்றச் சிறப்புப் பயிலரங்குகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஆரம்பப் பள்ளி முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்றுவித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைகளைச் சொல்லுதல் உள்ளிட்டவை மகிழ்ச்சி பாடத்திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ளன. 2018-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.64% டெல்லி அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததன் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தனர்.

பெருமிதம் நிறைந்தது ஆசிரியப் பணி என்பதை ஒவ்வோர் ஆசிரியருக்கும் உணர்த்த இங்கே பல திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. தலைமைப் பண்புத் திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளி முதல்வர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. 

30 ஆயிரம் டெல்லி ஆசிரியர்களுக்குக் கடந்த ஆண்டு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள தேசியக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பயிலரங்கத்துக்கு 400 ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள் 50 பேரைத் தேர்ந்தெடுத்துக் கோலாகலமாக விழா எடுத்து விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

தட்டிக்கேட்கும் அதிகாரம்

பெற்றோருக்கு, பள்ளி முதல்வரின் தரிசனமே காணக் கிடைக்காத ஒன்றாகத் தனியார் பள்ளிகள் மாறிவிட்டன. இதற்கு நேரெதிரான சூழல் இங்குக் கவனமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தேசியப் பாடத்திட்ட வடிவமைப்பு 2005-ன் பரிந்துரைப்படி பள்ளிதோறும் பள்ளி மேலாண்மை கமிட்டி நிறுவப்பட்டிருக்கிறது.

பெற்றோர், பள்ளித் தலைமை யாசிரியர், ஆசிரியர், எம்.எல்.ஏ. பிரதிநிதி உள்ளடங்கிய குழு இது. 16 பேர் கொண்ட கமிட்டியில் 75% பெற்றோர் இடம் வகிக்கின்றனர். இவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப் பதிவின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

இந்தக் குழு விடம் ரூ. 5-7 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தைச் சோதிக்க, வளாகத்தைப் பார்வையிட, ஆசிரியரின் வருகையைக் கண்காணிக்க, பாடத்திட்டத்தில் ஆலோசனை வழங்க இவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறாகப் பள்ளியின் செயல்பாட்டை நிர்வகிப்பதில் பெற்றோருக்கும் பங்குண்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது டெல்லி பள்ளிக் கல்வித் துறை. டெல்லியைச் சேர்ந்த அனைத்துப் பள்ளி மேலாண்மை கமிட்டிகளும் வாட்ஸ் அப் மூலம் இணைக்கப் பட்டிருக்கின்றன.

இதன் மூலம் டெல்லியின் ஏதோவொரு மூலையில் இருக்கும் பள்ளி எதிர்கொள்ளும் சிக்கலையும் உடனுக்குடன் கல்வி அமைச்சர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த முடியும். மொத்தத்தில் மகிழ்ச்சியான மனநிலையில் படிப்பதற்கான இடமாக டெல்லியின் அரசுப் பள்ளிக்கூடங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன.

கேடயம் ஏந்தும் கேரளம்

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு பள்ளி என்ற விகிதாசாரத்தில் தங்களுடைய மாநிலத்தில் 149 பள்ளிகளை, கேரள அரசு 2016-ல் தேர்ந்தெடுத்தது. அவை ‘Centre for Excellence’ என்ற நிலையை எட்டுவதற்கான பணி முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கென ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது.

அனைத்து மலையாள வாரியப் பள்ளிகளிலும் ஆங்கில மொழி சோதனைக்கூடம் உள்ளிட்ட ஆங்கிலம் கற்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இணைய வசதி, லேப்டாப், புரொஜக்டருடன் கூடிய  45 ஆயிரம் ஹைடெக் வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டன.

அரசியல்வாதிகளின் வாரிசுகள்

அரசியல்வாதிகள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.டி.பல்ராம், சி.பி.எம். எம்.பி. எம்.பி.ராஜேஷ், எம்.எல்.ஏ. டி.வி.ராஜேஷ் ஆகியோர் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தார்கள்.

இவர்களில் எம்.பி.ராஜேஷ் கேந்திரிய வித்யாலயாவில் படித்து வந்த தன்னுடைய மூத்த மகளை அரசுப் பள்ளிக்கு மாற்றினார். தன்னுடைய மகனுக்கு அடுத்தபடியாகத் தன்னுடைய பேரக் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படித்துவருகிறார்கள் என்று அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் தெரிவித்தபோது, புதிய அலை பாய்ந்தது.

கேரளத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் அங்கே படித்துவந்த தங்களுடைய குழந்தைகளை மாநில அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.

இதைக் கேள்விப்பட்டு உத்வேகம் அடைந்த டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான், எம்.எல்.ஏ. குலாப் சிங்  தங்களு டைய குழந்தைகளை டெல்லி அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு சேர்த்தனர்.

மாணவர் சேர்க்கைக் குறைவால் மூடும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த கேரள அரசுப் பள்ளிகளில் 6.3 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. மறுபுறம் தனியார், அரசுதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை 8 சதவீதம் குறைந்ததுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் கேரளக் கல்வித் துறையில் நிகழ்ந்த இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

கல்வித் தரம், பள்ளிக்கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் இவை இரண்டையுமே வலுப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதை இந்த முன்னுதாரணங்கள் உணர்த்துகின்றன.

தமிழகத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகள் ஆங்காங்கே இருக்கின்றன. அவை அந்தந்தப் பள்ளியில், பகுதியில் கல்விமீது அக்கறை கொண்டவர்களின் தனிப்பட்ட முயற்சியால் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு மெனக்கெட்டால் மட்டுமே வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் பரவலாகும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x