தேர்வுகளுக்கு அப்பால் ஓர் உலகம்!

தேர்வுகளுக்கு அப்பால் ஓர் உலகம்!
Updated on
3 min read

ஒவ்வோர் ஆண்டும் தேர்வு முடிவுகள் பரபரப்பாக எதிர்நோக்கப்படுகின்றன. கடினமான வினாக்கள், பொதுத் தேர்வு முறை மாற்றம் எனப் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

10-ம் வகுப்புத் தேர்விலும் பெரும்பாலான பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாகவே இருந்ததால், முடிவுகள் மாணவ மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பிலும் பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சில விஷயங்களைக் கருத்தில் கொண்டால் இந்தப் பதற்றம் அவசியமில்லாத ஒன்று. வென்றவர்களைக் கொண்டாட எல்லோரும் இருப்பார்கள். தோல்வியுற்றோருடன் ஆற்றுப்படுத்தும் மனநிலையுடன் பெற்றோர் இருப்பது அவசியம்.

தேர்வு என்பது கேட்கப்பட்ட வினாக்களுக்கு எந்த அளவு பதில் தெரியும் என்பதைக் குறிக்கும் அளவுகோல்தானே தவிர, நம் வாழ்க்கையின் வெற்றியைக் குறிக்கும் அளவுகோல் அல்ல.

மிகப் பெரிய மேதைகளும் வெற்றியாளர்களும் இளம் வயதில் பள்ளியையும் தேர்வு முறைகளையும் அடியோடு வெறுத்தவர்கள்தான். எனவே, தேர்வில் தோல்வியுற்றவர்களோ குறைந்த மதிப்பெண் பெற்றவர்களோ வாழ்க்கையே பறி போனதாக நினைக்கத் தேவையில்லை.

தனித்திறன் என்ன?

புகழ் பெற்ற ஆங்கில கவிஞரான  ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய ‘தி  ரோடு நாட் டேக்கன்’ என்ற கவிதையில், “நான் அதிகம் பயணிக்கப்படாத பாதையொன்றில் பயணித்தேன். அந்த முடிவே வாழ்வில் எல்லா மாற்றங்களுக்கும் காரணமானது” என்று தனித்தனின்மையுடன் வாழ்ந்தால் சாதனை படைக்க முடியுமென வலியுறுத்துகிறார்.

அதிக மதிப்பெண் பெற்று, பெருவரியானவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படிப்பையே நாமும் தேர்ந்தெடுப்பதைவிட நம்முடைய தனித்திறன் என்ன என்பதை அறிந்து அதற்குரிய படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்கள்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.

அதிகச் சிரமமில்லாமல் எதை உங்களால் சிறப்பாகச் செய்ய முடிகிறதோ, அதுவே உங்கள் தனித்திறமை. அத்துறையைத் தேர்ந்தெடுத்துக் கவனச் சிதறலின்றி ஆர்வத்துடன் உழைத்தால், இன்று உங்களுடைய குறையைக் காரணம் காட்டி மட்டம் தட்ட  நினைப்பவர்கள் ஒரு நாள் பிறருக்கு உதாரணமாக உங்களையே சுட்டிக்காட்டும் நிலை வரும்.

அடங்காதவன், முரட்டுத்தனமானவன் என ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளான நெப்போலியன், அதே முரட்டுத் தனத்தைத் தன் மூலதனமாகக் கொண்டு சாதாரணப் படை வீரனாய்ச் சேர்ந்து, படைத் தளபதியாகி தன் 35-ம் வயதில் பிரான்ஸ் தேசத்தின் அரசரானார். ‘முடியாது’ என்ற சொல் அகராதியிலே கிடையாது என்ற நேர்மறை எண்ணம்தான் அந்த மாவீரனின் வெற்றிக்குக் காரணம். 

தன் நிர்வாகத் திறமையால் புகழ்பெற்ற இங்கிலாந்து பிரதமரும் சிறந்த பேச்சாளரும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவருமான வின்ஸ்டன் சர்ச்சில் ‘எனது ஆரம்பகால வாழ்க்கை’ என்ற புத்தகத்தில் தன்னுடைய பள்ளிக்கூட நாட்கள் மிகவும் சோகமானவை என்று பதிவுசெய்துள்ளார்.

உருவான மேதைகள்

படிக்க லாயக்கற்றவன் எனப் பள்ளியில் முத்திரை குத்தப்பட்டதால் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைப் பதிவுசெய்யும் வேலையில் சேர்ந்து, தன் திறமையை அங்கே கண்டறிந்து, அதிலேயே மூழ்கியதன் விளைவாக சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். ‘படிப்பு வராது’ என ஒதுக்கப்பட்ட அவர், எப்படி அவ்வளவு சிறந்த மேதையாக விளங்கினார் என்று அவரது இறப்புக்குப் பின் மூளை குறித்து ஆராய்ச்சி செய்தது இந்த விந்தை உலகம்.

ஆய்வுக்கூடமே எரிந்து தன் பல்லாண்டு கால உழைப்பு வீணாகிப் போனபோதும் சோர்ந்து போகாமல் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளப் புதிதாய்த் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி மீண்டும் உழைக்கத் தொடங்கிய தலைசிறந்த விஞ்ஞானி யான தாமஸ் ஆல்வா எடிசனும் ‘மூளைக் கோளாறு உடையவன்’ என்று சிறுவயதில் பள்ளியிலிருந்து துரத்தப்பட்டவர்தான்.

தனித்திறனால் பணம், புகழ், பதவி எனச் சம்பாதிப்பது வெளிநாட்டில் சாத்தியமாகலாம். நம் நாட்டில் பணம் அல்லது படிப்பு ஏதாவது ஒன்று இருந்தால்தானே சாத்தியம் என்பவர்களுக்காக சில உதாரணங்களை முன் வைக்கிறேன்.

பத்தாம் வகுப்பைத் தாண்டாத முன்னாள் முதல்வர் கருணாநிதி முத்தமிழறிஞர் எனப் போற்றப்பட்டது அவரது மொழித்திறனால். பல அவமானங்களைச் சுமந்து போராட்டமே வாழ்க்கை எனக் கொண்ட திருநங்கையான நர்த்தகி பத்மஸ்ரீ விருது பெற்றது அவரது நடனத் திறனால்.

வாழும் உதாரணங்கள்

விவாகரத்தான பெற்றோரை விட்டு 14 வயதில் பிரிந்து சிறுசிறு வேலைகள் பார்த்துச் சம்பாதித்த பணத்தில் தன் படிப்பைத் தொடர்ந்த அருந்ததி ராய் தனக்கிருந்த எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொண்டதால் மிக உயரிய விருதான புக்கர் பரிசு பெற்றார்.

மைதானம் கூட இல்லாத சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ஏழைப் பெண் கோமதி மாரிமுத்து ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்தது தனது விளையாட்டுத் திறமையை அடையாளம் கண்டுகொண்டதால்.

வெற்றி உங்கள் பக்கம்

இன்று ஆப்பிள், கூகுள், சோகோ போன்ற நிறுவனங்கள் எங்களுக்குப் பட்டப்படிப்பு, தொழிற்கல்வி முடித்தவர்கள் தேவையில்லை. திறமையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால் போதும் நாங்களே பயிற்சியளித்து வேலையும் தருகிறோம் என்கின்றன.

எனவே, பிள்ளைகளே சோர்ந்து போகாதீர்கள். உங்களுக்கான உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. அதன் கதவுகளைத் தேடிச் செல்வது மட்டுமே உங்கள் வேலை. உங்கள் தனித்திறனைக் கண்டுபிடித்து அதையே உங்கள் தொழிலாக, வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களோடு சமுதாயத்துக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும் கனலாக அடிமனத்தில் எப்போதும் இருக் கட்டும். பிறகென்ன வெற்றி தேவதை உங்கள் வாசலில் தவமிருப்பாள்.

பெற்றோர் கவனத்துக்கு...தேர்வுகளுக்கு-அப்பால்-ஓர்-உலகம்right

தோல்வியுற்ற, குறைந்த மதிப்பெண் எடுத்த பிள்ளைகளை தனியே விட்டு விடாதீர்கள். மன அழுத்தத்தில் அழும் குழந்தையை, “படிக்க வேண்டிய நேரத்தில் படிக்காமல், இப்போது அழுது என்ன பயன்?” என்று குறைகூறுவதோ, பிறரோடு ஒப்பிட்டு அவமானத்துக்குள்ளாக்கி கேலி செய்வதோ பலனளிக்காது. மாறாக அவர்களுடைய மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.

வருத்தத்தில் நீங்கள் உமிழும் வெறுப்பு வார்த்தைகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வடுக்களைப் பிள்ளைகளின் ஆழ்மனதில் ஏற்படுத்திவிடும். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஏதேனும் ஒரு நேரத்தில் பெற்றோர்களின் வெறுப்பை வார்த்தைகளால் உணர்ந்தவர்களே என்கிறார் உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃபிராய்ட்.

நடந்தது சரியா, தவறா என்று யோசிப்பதைவிட இனி நடப்பது நல்லதாக இருக்க வேண்டுமென எண்ணிச் செயல்படுங்கள். உங்கள் பிள்ளையின் இப்போதைய முதல் தேவை உங்கள் அரவணைப்பும் ஆறுதலும்தான். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களுடைய திறனறிந்து, உடனிருந்தால் நீங்கள் நினைப்பதைவிடப் பல மடங்கு சிறந்து விளங்குவார்கள்.

தொடர்புக்கு:

anneflorenceammu@gmail.com

கட்டுரையாளர், துறைத் தலைவர்,

டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in